கன்னியாகுமரி மாவட்டம் குளப்புறம் ஊராட்சிக்கு உட்பட்ட திற்கோயிக்கல் நடை பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜ் என்பவரது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நான்கு ஆடுகள் வீட்டின் பின்புறத்தில் கொட்டகை அமைத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை கிறிஸ்துராஜ் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுக்க
வந்து பார்த்த போது மூன்று ஆடுகள் உடலில் பலத்த காயங்களுடன் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிறிஸ்துராஜ் மர்ம விலங்கு ஏதோ கடித்து ஆடுகள் இறந்துள்ளதோ என்ற அச்சத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் மற்றும் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு உயிருக்கு போராடியபடி கிடந்த ஆட்டிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஆடுகளை கடித்த விலங்கு எது என்று தெரிவதற்காக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது நான்கு வெறிநாய்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி உள்ளே குதித்து ஆடுகளை கடித்து குதறி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வெறிநாய் கடி காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் குமரி மாவட்டத்திலும் தற்போது வெறிநாய்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெறி நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.