தூத்துக்குடியில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முரளிகண்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கேடயம், கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், 1535 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 66 லட்சம் கடன் உதவியையும் வழங்கி பேசினார்.
அப்போது, "கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. அந்த கிராம மக்களின் பொருளாதார முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் விளங்கி வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அதன்படி கிராமப்புற மக்கள் கந்துவட்டிக்கு கடன் வாங்கி கஷ்டபடுவதை தவிர்க்கும் வகையில், கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதனை பெற்று மக்கள் தொழில் செய்து முன்னேறும் வாய்ப்பை கூட்டுறவு சங்கம் உருவாக்கி தருகிறது. வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அந்த திட்டம் நிறைவடையும் போது, மிகப்பெரிய மாற்றம் வரும். தூத்துக்குடி மாவட்டத்தில் 138.97 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.75 கோடியே 63 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1,379 பயனாளிகள் பயன்பெற்று உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கடன்களை இன்னும் அதிகரித்து வழங்க வேண்டும். இதனால் கிராமப்புற பெண்கள் நிலை மேம்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 575 முழுநேர ரேஷன்கடைகள், 275 பகுதி நேர ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பொதுவினியோக பொருட்கள் வழங்கப்படுகிறது. உங்கள் பணி தொடரட்டும். அதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்" என்றார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆியரத்து 732 விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் வைத்து இருந்த 57 ஆயிரத்து 192 பயனாளிகளுக்கு ரூ.160 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2,903 மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரூ.93 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று 20 சதவீதம் சலுகை விலையில் மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அனைத்து கடைகளிலும் மருந்துகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது, அந்த நிலை மாறி நல்ல நிலையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது" என்றார்.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம் ), ஜி.வி.மார்க்கண்டேயன்(விளாத்தி குளம்), தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான நடுக்காட்டு ராஜா, துத்துக்குடி சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன், பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.