பொதிகை தமிழ்ச்சங்கத்தின் 7-வது ஆண்டு தொடக்க விழா, சாதனை மலர் வெளியீட்டு விழா மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இவ்விழாவில் சாதனை மலரை சபாநாயகர் வெளியிட முதல் பிரதியை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் பெற்றுக்கொண்டார். பின்னர் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கி அவர்களை பாராட்டி கெளரவித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசும் பொழுது,
தமிழும் தமிழ்நாடும் இன்றும் அதே அடையாளாத்தோடு இருக்க முழு மூல காரணம் திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன் முயற்சி தான் என்பதை எல்லோரும் மறந்து விட முடியாது. தமிழுக்கு பணியாற்றக்கூடியவர்களை பாராட்டுவதில் பெருமை அடைகிறேன். தமிழ், உலகம் இருக்கும் வரை இருக்கும். இதற்கு தமிழ் வளர்க்கும் நபர்களே காரணமாகும். அதுவும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை யாரும் மறந்து விட முடியாது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்த பெருமை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியையே சாரும். அவர் முதலமைச்சராக இருந்தபோது பல தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கி மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை உருவாக்கித் தந்தார். தற்போது நம்முடைய முதல்வர் எடுத்து செல்கின்ற சமூக நீதிக்கு அச்சாணியாக இருந்தவர் பாரதியார், அவரின் படைப்புகள் தமிழகத்தோடு நின்று விட் கூடாது என்பதற்காக ஒன்றிய அரசோடு இணைந்து பணியாற்றி இந்தியா முழுக்க எடுத்து செல்லும் பணியும் மேற்கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றார்,
அதே போல விஞ்ஞானம், அறிவியல் முன்னேறி கொண்டு இருக்கிறது, அதோடு இந்த தமிழும் பயணித்து கொண்டிருக்கிறது என்றால் கலைஞர் வாழ்ந்து கொண்டிருந்தார். இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தழிழுக்கு துணையாக பாதுகாப்பாக இருக்கிற காரணத்தால் தமிழ் இந்த இடத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. தமிழ் மென்பொருள்களை உருவாக்கி இன்று உலகம் முழுவதும் தமிழில் அனைவரும் கணினியில் இயக்குகிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர் தான். கிராமந்தோறும் தகவல் தொழில்நுட்பம் வளர வேண்டும் என்பதற்காக பி.பி.ஓ.வை அறிமுகம் செய்து கிராமப்புற மக்கள் தகவல் தொழில்நுட்பம் பெறுவதற்கு உதவி செய்தார்.
தமிழ்நாட்டில் அரசு பணியில் யார் சேர்ந்தாலும் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து தமிழர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார். இதற்காக அவருக்கு இந்த நேரத்தில் உங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த அரசு தாமிரபரணி பொருநை நாகரீகத்தை வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்ல அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கி பணி நடந்து வருகிறது. இப்படி இந்த அரசு தமிழுக்கு பல்வேறு தொண்டுகளை செய்து வருகிறது என்றார், நிகழ்ச்சியின் இறுதியில் "பொருநை நாகரிகமே உலக நாகரிகத்தின் தொட்டில்" என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கினார்.