பொருநை  நெல்லை 6- வது புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கடந்த 25- ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  புத்தக திருவிழாவில் 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் மாலையில் இலக்கிய விழா கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. 7- வது நாளான  நேற்றைய  நிகழ்வில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். குறிப்பாக இவ்விழாவில் ஒரு நாள் ஒரு புத்தகம் என ஒவ்வொரு நாளும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஒரு புத்தகத்தை உருவாக்கி மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிட்டு வருகின்றனர். விழாவில் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோர் இணைந்து  வானம் நம் வசம் என்ற நூலினை எழுதி வடிவமைத்த நிலையில் அதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பெற்று கொண்டார். தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய ஒளி, ஒலி காட்சியினை பார்வையிட்டனர்.




தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட எம்பி கனிமொழி பேசுகையில், ”பொருநை புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்வதை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். நெல்லை மக்களின் இலக்கிய படைப்புகள், அவர்களின் ஆர்வம், இலக்கியம் மீது கொண்டுள்ள காதல் ஆகியவற்றால் இந்த புத்தகத்திருவிழா சிறப்பாக நடக்கிறது. இந்த உணர்வை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லவேண்டும் என்றே நமது முதல்வர் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாவை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் பன்முத்தன்மையை  மக்களிடம் எடுத்துக்கூறும் மையமாகவே புத்தகத் திருவிழா உள்ளது. பன்முகத்தன்மை கொண்ட நம்முடைய வாழ்வியல் முறையாக இருந்திருக்கிறது. அப்படியில்லையெனில் பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்  என சொல்ல ஒரு  சமூகம் முன்வந்திருக்காது.. இந்த சமூகம்  கேட்க மறந்த எத்தனையோ கேள்விகளை முன்வைக்க வேண்டியது தான் இலக்கியத்தின் கடமை. இந்த சமூகம் எந்தெந்த கேள்விகளை கேட்டால், ஒரு அரசாங்கத்திற்கு மக்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களுக்கு வசதியாக இருக்குமோ அந்த கேள்விகளையெல்லாம்  கேட்க தூண்டுவது இலக்கியம், கலை போன்றவை தான். 




இந்த உலகத்தில் பல்வேறு மூலைகளில் இருக்கக்கூடிய வாழ்வியலை தெரிந்து கொள்ள மிகச் சிறந்த வழி புத்தக, இலக்கியம். புத்தகம் பல்வேறு விசயங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்ந்து இந்த நாட்டின், உலகத்தின் பன்முகத்தன்மையை நம் புரிந்து  கொள்ளக்கூடிய வகையில் நமக்கு உணர்த்தக் கூடிய ஒன்றாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஒரு இனம் இலக்கியம் என்று, கலை என்று, மனிதநேயம் என்று வரும் போது எல்லா மாச்சரியங்களையும் கடப்பதுதான் இலக்கியத்தை உண்மையாக வரித்துக் கொண்டு இருப்பதற்கான அடையாளம் என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   நாம் நம்மை சுற்றி நடக்கும் எந்த விசயத்தையும் கண்டு கொள்வதும் இல்லை. அதனை பதிய வைப்பதும் இல்லை, அது தான் நாம் பல விஷயங்களை பதிவு செய்யாமலேயே கடந்து கொண்டு இருக்கக்கூடிய ஒரு இனமாக மாறுவதற்கான காரணம். எழுத்தாளரின் கடமை  நம்முடைய கண்களில் பதிவு செய்யப்படாத விஷயங்களை நம் சிந்தனையில் பதியாத பல விஷயங்களை பதித்து நம் கண்களுக்கு முன்னால், நம் சிந்தனைகளுக்கு  முன்னால், நம் வாழ்வியலுக்கு முன்னால் கொண்டு வருவது. அதை நுகர்ந்து இங்கே எல்லாருக்குமான ஒரு உலகத்தை எல்லாருக்கும் உரிமையும், சம உரிமையும், சமூகநீதியும் இருக்கக்கூடிய ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை நாம் மீட்டெடுக்க  வேண்டும் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண