நெல்லையில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறும்பொழுது,  ''தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இதுவரை பெட்ரோல் குண்டை எடுத்ததாக நினைவில்லை. பழைய நினைவு என்றால் பாஜகவின் முக்கிய தலைவர்கள் குறிப்பாக கோயமுத்தூரில் ஒருவர், திண்டுக்கல்லில் ஒருவர், திருவள்ளூரில் ஒருவர் என மூவரும் 2013 & 17ஆம் ஆண்டுகளில் பெட்ரோல் குண்டு வீசினர். விசாரணையில் 3 சம்பவங்களும் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்கும், எங்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதற்கும்தான் வீசினோம் என விசாரணையில் கூறியுள்ளனர்.   


அதே போல இந்து மக்கள் கட்சி 2018இல் ஒருவரும், 2020இல் திருப்பூரில் ஒருவரும், திருச்சி அருகே ஒருவரும் என மூவரும் கட்சியில் முக்கியமான ஆட்கள் என தெரிவித்து, பைக், கார் எரிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.  இந்த 6 சம்பவத்தோடு கருக்கா 4 சம்பவங்களையும் சேர்த்து 10 சம்பவங்களும், பாஜக &  இந்து மக்கள் கட்சி திட்டமிட்டு, தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கவும், வன்முறையைத் தூண்டவும் செயல்படுவது தெரிகிறது.


கொடூரமான செயலை செய்யலாமா?


அதேபோல வெளி மாநிலத் தொழிலாளர்களைத் தமிழ்நாட்டில் அடித்து விரட்டுகின்றனர் என சொல்லி, கலவர சம்பவங்கள் பாஜக பின்னணியில்தான் நடந்தது. ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், ஓட்டு வாங்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வளவு பெரிய கொடூரமான செயலை செய்யலாமா?


ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் விவகாரத்தில், பாஜகவினர் இரு பிரிவுகளாக செயல்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்கின்றனர்.


இப்படி சம்பவங்கள் நடக்கிறது என்றால் ஒட்டு மொத்தமாக ஒரு குறிப்பிட்ட இயக்கம், ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும்தான் பெட்ரோல் குண்டை வைத்து விளையாடுகின்றனர். தமிழக முதல்வர் நிச்சயமாக சட்டத்தின் ஆட்சி நடத்துவார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த  நடவடிக்கை எடுப்பார் என்றார். 


தமிழகத்தில் வன்முறை சம்பவங்களைத் தூண்டுவதற்கு துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் புட்டப் கேஸ்,  செட்டப் கேஸ் அதெல்லாம் போட வேண்டும் என  தீவிரமாக இருக்கிறார்கள். அது தமிழகத்தில் நடக்காது.


ஆளுநர் மாளிகை அருகே வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தமிழக போலீசார் முறையாக விசாரித்தால் உண்மையை சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என தோன்றுகிறது.’’


இவ்வாறு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.


சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுனர் அனுமதி அளிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,  ’’அரைகுறை படிப்பு ஆல்வேஸ் டேஞ்சர். அதுதான் ஆளுநருக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது’’ என தெரிவித்தார்.