சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பாளையங்கோட்டையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு  திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு ஆதித்தமிழர் கட்சி சார்பில் உள் இட ஒதுக்கீடு பெற்று தந்த திமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நன்றி ஊர்வலத்தை நடத்துகின்றனர். இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. ஆதித்தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர்  ஜக்கையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,


அருந்ததியர் இன மக்களுக்கு உள் ஒதுக்கீடு பெற்றுத்தந்த திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் இந்த உள் ஒதுக்கீட்டை சிலர் எதிர்த்து பேசி வருகிறார்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு மறு ஆய்வை புறந்தள்ள வேண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கி நடத்திட வேண்டும் 18% இட ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் அருந்ததியர் இன மக்களுக்கு ஆறு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பொது தலைவராக நாங்கள் பார்க்கிறோம். ஆனால் இந்த உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அவரது நிலைப்பாடு வேதனை அளிக்கிறது உள் ஜாதி உணர்வோடு அவர் நடந்து கொள்கிறார். அவரது கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் வன்மத்தோடு பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார். அவரது செயல்கள் தலித் மக்கள் இடையேயான ஒற்றுமையை கெடுக்கும் மோதல் ஏற்படுத்தும்  சூழல் உருவாகும். அருந்ததியர் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா அரசிற்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்து வருகிறார் இதன் மூலம் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயலுக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவிப்பது போன்ற நிலையை உருவாக்குகிறது.


திருமாவளவன் திமுக அரசிற்கு எதிராக செயல்படுகிறாரா? ஒன்றிய பாரதிய ஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா?  என்ற கேள்வி எழுகிறது. விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்கள் அத்வாலே, உள்ளிட்டோரை நேரில் சந்தித்து உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு டெல்லியில்  லாபி செய்யும் வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசையும் தமிழக மக்களையுமே நாங்கள் நம்பி இருக்கிறோம். அரசியல் அதிகாரமும் எங்களிடம் இல்லை. திருமாவளவனின் இந்த செயல்கள் சரியானது அல்ல. எல்லா மாநிலங்களிலும் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா உள்ளிட்டோரை எதிர்த்து அதே கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர் விமர்சனம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,