இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என்று வாக்குறுதி கொடுத்த பிரிட்டிஷார் சொன்னபடி செய்யவில்லை. இதனால் நாடு முழுவதும் சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்தது . காங்கிரஸ் கட்சியினர் பம்பாயில் கூடி, 1942 ஆகஸ்ட் எட்டாம்தேதி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றினர். அக்கூட்டத்தில் பேசிய காந்தியடிகள் ”செய் அல்லது செத்துமடி” என்ற முழக்கத்தை முன்வைத்தார். ஆகஸ்ட் 9 1942 அன்று காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, மெளலானா அபுல்கலாம் ஆசாத், பாபு ராஜேந்திரபிரசாத், சரோஜினி, மகாதேவ தேசாய் உள்ளிட்ட தேச விடுதலை தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் காமராஜர் , சத்தியமூர்த்தி உட்பட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் சிறைவைக்கப்பட்ட இடங்கள் தெரியவில்லை.






தமிழ்நாடு முழுவதும் போராட்டம் அமைதியான முறையில் அகிம்சை வழியில் தொடங்கிய போராட்டம் மிதவாதப் போக்கில் இருந்து மாறியது. அஞ்சல் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன, தந்திக் கம்பங்கள் வெட்டி எறியப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. தமிழகம் முழக்க போராட்டம் வெடித்தது. அதன் தொடர்ச்சியாக உடன்குடி வட்டார இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சுகந்திர சேனா என்ற ஒரு கொரில்லா அமைப்பை உருவாக்கி பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டங்களை ரசியமாக முன்னெடுத்தனர்.




1942 ஆகஸ்ட் 11 ம் நாள் உடன்குடி பகுதியில் சுதந்திர போராட்டங்களை ஒருங்கிணைத்த தியாகி படுக்கப்பத்து மேகநாதன் தலைமையில் வெள்ளாளன் விளை தேரியில் ஒரு ரகசிய கூட்டம் நடந்தது. அந்த கூட்ட முடிவில் திருச்செந்தூர் முதல் குலசேகரன்பட்டினம் வரை உள்ள தந்தி கம்பங்களை இரவோடு இரவாக நம் சுதந்திர போராட்ட வீரர்கள் உடைத்தெறிந்தனர். அதன் தொடர்ச்சியாக 1942 ஆகஸ்ட் பன்னிரெண்டாம் நாள் ஆறுமுகநேரி சந்தைத் திடலில் பெருந்திரள் பொதுக்கூட்டம் நடந்தது. தலைவர்கள் பேசி முடித்ததும், அரசமரத்தடியில் இருந்து கிளம்பிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள், சத்தியாகிரகப் போரட்டம் நடத்த உப்பளம் நோக்கி ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றனர். த.தங்கவேல், எஸ்.ஏ.ராமச்சந்திரன், கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், எம்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் தலைமையேற்று கைதாகினர். நாதன்கிணறு, பூச்சிக்காடு பகுதிகளில் இருந்த கள்ளுக்கடைகள் , அரசு காடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.




ஆகஸ்ட் 18,1942 அன்று குரும்பூர் ரயில் நிலையத்தைக் கைப்பற்றி பிரிட்டிஷ் அரசுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. கதர் பண்டல்கள், ஆயுதங்களை எடுத்துக்கொண்ட போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்கு தீ வைத்தனர். குரங்கனி, தென்திருப்பேரை, கடையனோடை, மூக்குப்பேறி பகுதிகளில் தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டு பிரிட்டிஷாரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பிரிட்டிஷ் போலீஸ் விடுதலை உணர்வை நசுக்கிட வீடு வீடாக தேடுதல் வேட்டை என்ற பெயரில் அத்துமீறினர். இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.




இதனால் வெகுண்டெழுந்த தலைவர்கள் ஒன்றாகக் கூடி தாங்கியூர் அருகே செப்டம்பர் 16ம் தேதி 1942ல் அன்று படுக்கபத்து மங்களா பொன்னம்பலம் தலைமையில் ஒரு ரகசியக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்ட முடிவில் சாத்தான் குளம் காவல் நிலையத்தை கைப்பற்றி அங்குள்ள ஆயுதங்களை எடுக்க முடிவு செய்தனர் . அதன்படி மெஞ்ஞானபுரம் தபால் அலுவலகம் தாக்கப்பட்டு, தீவைக்கப்பட்டது. சாத்தான்குளம் காவல்நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, நான்கு காவலர்களை சிறையில் அடைத்து ஆயுதங்களைப் பறித்துக் கொண்டனர். தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டதால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. தாமதமாகத் தகவலைத் தெரிந்து கொண்ட, திருநெல்வேலி கலெக்டர் ஹெச் மாடி, மலபார் காவல்படையின் துணையோடு வந்து சாத்தான்குளம் காவல்நிலையத்தை மீட்டார். ஆகஸ்ட் புரட்சி நாடு முழுக்க தீவிரமாக இருந்து வந்த நிலையில் போராட்டங்கள் செப்டம்பர் மாதமும் தொடர்ந்தது.




1942 செப்டம்பர் 17ம் தேதி இரவில் உடன்குடி பகுதி சுதந்திர போராளிகள் தூக்கு மேடை ராஜகோபால் தலைமையில் ஒன்று கூடி பூச்சிக் காடு சுனை அருகே ரகசிய கூட்டம் நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி குலசேகரன்பட்டினத்தில் உப்பளத்தில் உள்ள 12 துப்பாக்கிகளை கைப்பற்ற முடிவு செய்யப்பட்டது. 1942 செப்டம்பர் 19ஆம் நாள் நள்ளிரவில் கிளம்பிய உடன்குடி விடுதலை வீரர்களின் போராட்டக்குழு குலசேகரப்பட்டினம் அருகே உள்ள உப்பளத்துக்குள் ரகசியமாக உள்நுழைந்தனர். உப்பளத்தில் எதிர்தாக்குதல் நடத்த முயன்ற காவலர்களைக் கட்டிப்போட்டு, போராட்டக்காரர்கள் ஆயுதங்களைப் பறித்துக் கொண்டனர்.




1942 செப்டம்பர் 20 அதிகாலை உப்பளத்தில் விடுதலை வீரர்கள் தாக்குதல் நடத்தி கொண்டு இருந்த போது அதன் எதிரே உள்ள முஸாபரி பங்களாவில் பிரிட்டிஷ் உப்பள அதிகாரி வில்பிரட் லோன் என்பவர் இருந்தார். வட ஆஸ்திரியாவை சேர்ந்த இவர் சத்தம் கேட்டு எழுந்து வந்து கூட்டமாக வரும் போராட்டக்காரர்களைப் பார்த்ததும் துப்பாக்கியால் சுட முயன்றார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்த வேல்கம்பு முந்திக்கொண்டது. மண்வெட்டிக் கணையால் தாக்கப்பட்ட லோன் கீழே விழுந்தார். கூட்டத்திலிருந்து சராமரியாக வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே லோன் கொல்லப்பட்டார். விடுதலை வீரர்கள் தலைமறைவாயினர்.




வில்பிரட் லோன் கொலையைத் தொடர்ந்து திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, குலசேகரப்பட்டினம் பகுதிகளில் கிராமம், கிராமமாக பிரிட்டிஷ் காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியது. கண்ணில் கண்டவர்கள் தாக்கப்பட்டனர், சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன, பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். இராஜகோபாலன், காசிராஜன், பெஞ்சமின் ஆகியோர் பன்னம்பாறை காட்டில் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என சுமார் 500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ராஜகோபாலன், காசிராஜன், ஏ.எஸ்.பெஞ்சமின், செல்லத்துரை, தர்மம் கோயில்பிள்ளை, கே.பொன்னையா, பி.நாராயணன், ரெத்தினசாமி என்ற பெருமாள், மகாராஜன், தேவயிரக்கம், கனி, செல்லத்துரை, தங்கையா, ஆறுமுகம், நாராயணன், நெல்லையப்பன், சிவந்திக்கண் என்ற முத்துமாலை, தங்கசாமி, மோட்டார் ரெத்தினசாமி, பூவலிங்கம், மு.லெட்சுமணன், தங்கையா என்ற ஆசீர்வாதம், காசி, துரைச்சாமி, க.லெட்சுமணன், வி.மந்திரக்கோன் ஆகிய 26 இளைஞர்கள் கொலையில் ஈடுபட்டதாக வழக்கில் சேர்க்கப்பட்டு, திருநெல்வேலி கொக்கிரகுளம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஜெயிலில் கடும் சித்திரவதைக்கு ஆளானார்கள் கைதிகள். விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.




திருநெல்வேலி நீதிமன்றத்தில் குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு என்று பிரிட்டிஷார் குறிப்பிட்ட லோன் துரை கொலை வழக்கில் 06.02.1943 அன்று தீர்ப்பு வெளியானது. இராஜகோபாலன், காசிராஜன் இருவருக்கும் தூக்குதண்டனை, ஏ.எஸ்.பெஞ்சமின், ஆர்.செல்லத்துரை, டி தர்மம், கோயில்பிள்ளை, தங்கையா, சிவந்திக்கண் என்ற முத்துமாலை, மந்திரக்கோன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை, கே.பொன்னையா, ரெத்தினசாமி என்ற பெருமாள், மகாராஜா, ஆறுமுகம், கனி, செல்லத்துரை, நாராயணன், நெல்லையப்பர், தங்கச்சாமி, லெட்சுமணன், தங்கையா என்ற ஆசீர்வாதம் ஆகியோருக்கு தண்டனைக் காலம் முடிந்து விடுதலையும், நாராயணனுக்கு ஐந்தாண்டுகள் சிறை, மோட்டார் ரெத்தினசாமி, பூவலிங்கம் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.




தூத்துக்குடி கிட்டு என்ற வெங்கடகிருஷ்ணன் மற்றும் எம்.சி.வீரபாகு ஆகியோரின் முயற்சியால், ராஜாஜியின் உதவியை நாடி நீதிமன்றத்தில் போராடி, லண்டன் பிரிவியூ கவுன்சிலில் வாதாடி தூக்கு தண்டனை பெற்ற இராஜகோபாலன், காசிராஜன் இருவரின் தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில், டி.பிரகாசம் முதல்வராகப் பொறுப்பேற்றதும், 1946 ஏப்ரல் மாதம் 84 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் குலசை வழக்கில் தொடர்புடைய கைதிகளும் விடுதலை ஆனார்கள்.