நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நெல்லை பெருமாள் புரத்தில் 82 லட்சம் மதிப்பில் நகர பொது சுகாதார ஆய்வகம், நெல்லை மாவட்டம் எட்டான்குளம் மற்றும் அத்தாளநல்லூரில் புதிய துணை சுகாதர நிலையங்கள் திறப்பு விழா ஆகியவை தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில்  தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு இந்த புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முடிவற்ற பணிகளையும் திறந்து வைத்தார்.


இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில், ”நெல்லை மாவட்டத்தில் 1.80 கோடி மதிப்பில் செவிலியர் பயிற்சி பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செவிலியர் பயிற்சி பெறுவதற்கு ஆறு பள்ளிகள் மட்டுமே இருக்கும் நிலையில் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்டவைகள் படித்த மாணவிகள் பயிற்சி பெறுவதற்காக 30 செவிலியர் பயிற்சி பள்ளிகள் கூடுதலாக மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு தற்போது 11 செவிலியர் பயிற்சி பள்ளிக்கு அனுமதி கிடைத்துள்ளது. புதியதாக அனுமதியை கிடைக்கப்பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளிகள் அனைத்தும் புதியதாக திறக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி வேண்டும் என்பது முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கனவு. அதனை பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் நிறைவேற்றினார்.. தற்போது அந்த கருத்தை பிரதமரும் வலியுறுத்தி வருகிறார். தென்காசி, திருப்பத்தூர் மயிலாடுதுறை உள்ளிட்ட புதிய ஆறு மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரி இல்லாத நிலை உள்ளது. தற்போது அந்த மாவட்டங்களுக்கும் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.




தொடர்ந்து பேசிய அவர், ”உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு விருது வழங்கிய கவுரவமும் செய்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் அதிக அளவிலான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 177 கோடி ரூபாய் மதிப்பில் 10 மருத்துவ கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நெல்லை மாவட்டத்தில் நடந்து வருகிறது. கொரோனா காலத்திற்கு பின்பு மாரடைப்பு இளம் வயதினருக்கும் அதிகம் வருகிறது. இந்த வகையான பாதிப்புகள் கிராமப்புற மக்களுக்கு வரும் நிலையில் உடனடியாக சிகிச்சை பெறுவதில் சிக்கல்கள் நிலவி வந்தது. இதனை தடுக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சரால் இதயம் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 14 மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் தமிழகத்தில் உள்ள 10,990 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் நாய் கடி மற்றும் பாம்பு கடிக்கான மருந்துகளும் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவில் இருக்கும் பேறு கால இறப்பு விகிதம் போல் மேகாலயா மாநிலத்திலும் குறைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அம்மாநில சுகாதரத்துறை அமைச்சர் தமிழக அரசிற்கு வைத்த கோரிக்கையை ஏற்று மேகாலய மாநிலத்தை சேர்ந்த 29 மருத்துவர்களுக்கு பேறு  கால இறப்பை தடுக்கும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு மற்றொரு மாநிலத்தில் பயிற்சி அளித்தது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பதை குறிப்பிட்டு மேகாலய முதல்வரும் தமிழக அரசை பாராட்டியுள்ளார்” எனத் தெரிவித்தார்.