நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மகன் செல்வசூர்யா(17), பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் சாதி கயிறு கட்டுவது தொடர்பாக கடந்த 25 ஆம் தேதி ஏற்பட்ட கோஷ்டி மோதலில் படுகாயமடைந்த செல்வசூர்யா 5 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர், மேலும் இச்சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்களான ஷீபா பாக்கியமேரி தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார், மேலும் இச்சம்பவம் தொடர்பாக பள்ளியில் ஆய்வு செய்ய பள்ளி மேலாண்மை குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்,




இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகவும், ஆசிரியர்கள் மற்றும் தனது மகனை கொலை செய்த மூன்று மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயிரிழந்த மாணவனின் பெற்றோர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர், இது குறித்து உயிரிழந்த மாணவனின் தாய் உச்சிமகாளி கூறும்பொழுது, எனது மகன் நன்றாக படிப்பான் என்பதால் ஆங்கில வழியில் படிக்க வைக்க பணம் இல்லாததால் அரசு பள்ளியில் படிக்க வைத்தோம், பரீட்சை எழுத சென்ற எனது மகன் வீடு திரும்பவில்லை, சம்பவம் நடந்து 2 மணிநேரமாக ஆசிரியர்கள் 108 ஆம்புலன்சுக்கு காத்துக்கொண்டிருந்துள்ளனர், ஆசிரியர்கள் காரில்தான் வந்துள்ளனர், எனது மகனை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் நினைத்திருந்தால் எனது மகனை காப்பாற்றியிருக்கலாம்.


2 மணிநேரம் தாமதமாக அம்பை அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்து உள்ளனர், அங்கு காதில் லேசான காயம் என சிகிச்சை அளித்து உள்ளனர், அப்போது மயக்கமடைந்த எனது மகனை பசங்கதான் அம்பைக்கும் அங்கிருந்து பாளை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர்,




போலீசாரும் எனக்கு எந்த தகவல் சொல்லவில்லை. எனது மகன் யாரிடமும் வம்புக்கு போக மாட்டான் அந்த அளவுக்கு எங்கள் நிலைமை வறுமையில் உள்ளது,  எனது கணவர் ராணுவத்தில் சேர நினைத்தார் ஆனால் அவரால் முடியவில்லை, எனவே எனது மகனையாவது ராணுவத்தில் சேர்த்து நாட்டுக்காக உழைக்க வைக்க நினைத்தோம், ஆனால் எனது மகனை படுகொலை செய்து சித்ரவதை செய்து உள்ளனர்,  இனிமேல் வேறு எந்த குழந்தைகளுக்கும் இந்த நிலை வரக்கூடாது, எனவே அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் எனது மகனை கொன்ற மாணவர்கள் மீது தக்க தண்டனை கொடுக்க வேண்டும். அவனை கொடூரமாக அடித்துள்ளனர், எனது ஒரே மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமை அடைந்திருப்பேன். வேறு எந்த பெற்றோருக்கும் இந்த நிலை வரக்கூடாது என வருத்தம் தெரிவித்தார்.


அரசும் இது போன்று கவனக்குறைவாக இருக்காமல் தங்கள் பிள்ளைபோல் நினைத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.




இதுகுறித்து மாணவனின் உறவினர் மணிகண்டன் கூறும்போது, ”ஒரு ஆசிரியர் பார்க்கிறார் என்றால் அதனை அவர் தடுத்திருக்க வேண்டும், இச்சம்பவத்தை தடுக்க முயன்ற மாணவனையும் ஆசிரியர்கள் தடுத்துள்ளனர். அப்படியென்றால் இது திட்டமிட்ட கொலைதானே? அடித்தது பள்ளி மாணவர்கள் என்றாலும் இப்படி கொலை செய்யும் அளவுக்கு நடந்திருக்க கூடாது.  எனவே ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது போன்று ஒரு சம்பவம் வேறு எங்கேயும் இனி நடக்கக்கூடாது”  என்று தெரிவித்தார்