நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு வரும் 19ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள தளபதி முருகன் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார்.


நெல்லையில் போட்டியிடும் ரஜினிரசிகர்:


தொடர்ந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார், அப்போது கூறுகையில்,  நான் தமிழகத்தில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறேன்.  40 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினிகாந்த் மன்றத்தில் பணியாற்றி வருகிறேன். தலைவர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் என்னை போன்று ஒரு சிலர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம். தலைவரின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்க வேண்டும், அதிவிரைவில் என்னை அழைத்து ஆசீர்வாதம் செய்தால் அது ஒன்றே போதும்.


அவரிடம் காசு, பணம் எதுவும் எதிர்பார்க்கவில்லை, அவருடைய அன்புக்காக தான் 40 வருடமாக உழைத்தோம், நற்பணிகளை செய்தோம். இப்போதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம்.  அதனால் அவரின் ஆசீர்வாதமும், தலைவர் எந்த கட்சிக்கும் வாய் திறக்காமல் இருந்தால் நான்  நிச்சயம் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெறுவேன்.  நான் வெற்றி பெற்றால் எந்த கட்சிக்கு செல்வேன் என தெரியாது. நான் கட்சிக்காக அல்ல, சுய சமூக ஆர்வலர். எனக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளது.


பிரச்சாரத்திற்கு தலைவர் வர வேண்டாம்:


திருநெல்வேலி தொகுதியில் 40 வருடம் உழைத்துள்ளேன். அந்த உழைப்புக்கு வெற்றி உறுதி என நம்புகிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தலைவர் பிரச்சாரத்திற்கு வர வேண்டாம், பணகுடியில் படத்திற்கு சூட்டிங் வரும் போது திருநெல்வேலியில் என் முகத்தை பார்த்தாலே போதும் வெற்றி நிச்சயம் ஆகிவிடும். ரஜினிகாந்த் படத்துடனே வாக்கு சேகரிக்க  நான் களம் இறங்குவேன் என்று தெரிவித்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த தளபதி முருகனின் கலகலப்பான இந்த பேட்டி அனைவரின் முகத்திலும் சிரிப்பை ஏற்படுத்தியது.


தமிழகம் முழுவதும் சுயேச்சைகள் ஒரு சிலர் மட்டுமே மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியரின் அலுவலக வாசலில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து நூறு மீட்டர் தொலைவிற்கு அரசியல் கட்சிக்கொடியுடன் வேட்பாளர் யாரும் வரக்கூடாது.


சுயேட்சை வேட்பாளர்:


வேட்பாளர உட்பட 5 பேர் மட்டுமே வர அனுமதி என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று நெல்லையைச் சேர்ந்த தளபதி முருகன் என்ற நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர். இன்று நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சுயேட்ச்சையாக போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். நெல்லையில் இதுவரை ஒரே ஒரு நபர் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது