கேரளா மாநிலம் கொல்லம் பரவூரை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் திருவனந்தபுரத்தில் ஒரு பிரபல நகைக்கடையில் டிரைவராக வேலை செய்துவந்தார். பிரவீனுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. பிரவீன் வேலை செய்த நகைக்கடையில் திருவனந்தபுரம் காட்டாக்கடையைச் சேர்ந்த காயத்ரி (24) என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். பிரவீனுக்கும் காயத்ரிக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் நெருங்கி பழகினர். பிரவீனின் மனைவிக்கு இது தெரியவரவே நகைக்கடை நிர்வாகத்துக்கும், காயத்ரியின் வீட்டுக்கும் தகவல் சொன்னதுடன் பரவூர் காவல் நிலையத்தில் பிரவீன் மீது புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து நகைக்கடை நிர்வாகம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காயத்ரியை வேலையில் இருந்து நீக்கியது. கடந்த மாதத்தில் பிரவீனை தமிழ்நாட்டில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்தது.
இந்த நிலையில் பிரவீன், காயத்ரியையும் அழைத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை திருவனந்தபுரம் தம்பானூரில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து வசித்துள்ளார். சனிக்கிழமை மாலையில் திடீரென அறையை விட்டு வெளியேறியிருக்கிறார் பிரவீன். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் ஓட்டல் ரிஷப்ஷனுக்கு போன் செய்து 107-ம் எண் அறையில் காயத்ரி இறந்து கிடப்பதாக தகவல் சொல்லிவிட்டு போனை துண்டித்துள்ளார். ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது வெளிப்பக்கமாக பூட்டியிருந்ததால் தம்பானூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் ஓட்டலுக்கு சென்று வாயில் நுரைதள்ளியபடி இறந்துகிடந்த காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிரவீன் கொல்லம் பறவூர் போலீஸ் ஸ்டேஷனின் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தார். இதற்கிடையே காயத்ரிக்கு பிரவீன் தாலிக்கட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதையடுத்து பிரவீனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பிரவீனிடம் நடந்த விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "பிரவீனும் காயத்ரியும் நெருங்கி பழகிவந்த நிலையில் காயத்ரிக்கு அடிக்கடி சந்தேகம் வந்துள்ளது. காயத்ரியின் சந்தேகத்தை போக்க 2021 பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில் ஒரு சர்ச்சில் வைத்து அவருக்கு தாலிகட்டியுள்ளார் பிரவீன். தாலிகட்டியது சம்பந்தனான புகைப்படங்களை இருவரும் செல்போனில் பத்திரமாக வைத்துள்ளனர். பின்னர் பிரவீன் தமிழ்நாட்டில் உள்ள கிளைக்கு வேலைக்கு செல்வதை அறிந்த காயத்ரி தன்னையும் தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என காயத்ரி அடம்பிடித்துள்ளார். அதுபற்றி ரூம்போட்டு பேசலாம் என காயத்ரியை திருவனந்தபுரம் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரவீன். ரூமில் வைத்து தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்லமாட்டேன் என பிரவீன் சொல்லியிருக்கிறார்.
பிரவீன் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த காயத்ரி தங்கள் திருமண போட்டோ உள்ளிட்டவைகளை வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்ததுடன் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன் துப்பட்டாவால் காயத்ரியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது செல்போனையும் எடுத்துக்கொண்டு ஓட்டலில் இருந்து வெளியேறினார். பின்னர் காயத்ரியின் போனில் இருந்து ஓட்டலுக்கு போன் செய்து தகவல் சொல்லியிருக்கிறார். இந்த வழக்கு பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.