தென் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை நேற்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி இரவில் இருந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஏரிகள் தொடங்கி அணைகள் ஆறுகள் என 4 மாவட்டங்களும் மழைநீரினால் தத்தளித்துக் கொண்டு உள்ளது.  தென் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த 4 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இன்று (17-12-2023) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் திருநெல்வேலி. தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதி கனமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.


திருநெல்வேலி, மாவட்டங்களில் தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும். உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 




இது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஊரக வளர்ச்சி இயக்குநர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் நகராட்சிகளின் இயக்குனரையும், கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையரையும் இம் மாவட்டங்களில் இருந்து பணிபுரிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். 




 


அதிகனமழை பெய்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 90 வீரர்கள் கொண்டு 3 குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் விரைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50


வீரர்கள் கொண்ட தலா இரண்டு குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக விரைந்துள்ளன.


அதிகனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2:18 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.


17-12-2023 மற்றும் 18-12-2023 ஆகிய நாட்களில் தென் தமிழ்நாடு மற்றும் அதனை அடுத்துள்ள வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, இலங்கை மற்றும் தென் கேரள கடலோரப் பகதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும். 19-12- 2023 தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக தேவைப்படும் இடங்களில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் மூலம் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ன.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மேலும், அதிகனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.



  • நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

  • நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

  • பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும்.

  • ரொட்டி, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

  • மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும். 


பொது மக்களுக்கான அறிவுரை



  •  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் முகாம்களுக்கு செல்ல வேண்டும் பேரில் முன்கூட்டியே நிவாரண

  • முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

  • நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல் ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

  •  அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்

  •  அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

  • மாநில அவசரகால செயல்பாட்டு மையம் -1070

  • வாட்ஸ் அப் எண். - 94458 69848

  • மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் - 1077


மேற்சொன்ன மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, கனமழையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிருவாகங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.