தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது,  இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வந்து மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகளுக்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்  வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், சுயேச்சையாக போட்டியிடும் 28 வயதுடைய பட்டதாரி பெண் பிரியங்கா என்பவர் வயக்காட்டில் தனது வேட்புமனுவை வைத்து வணங்கிவிட்டு  அப்பகுதியை சேர்ந்த பெண்களுடன் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரும் பல பணிகளுக்கிடையே விவசாய பணியையும் அவ்வப்போது தனது குடும்பத்தாருடன் சேர்ந்து செய்து வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணின் இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது,  




இது குறித்து ஏபிபி செய்தி மூலமாக நாம் அவரை தொடர்பு கொண்டு பேசினோம், அப்போது அவர் கூறும் பொழுது, என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர், நான் என் குடும்பத்திற்கு மூன்றாவது பெண், எனது குடும்பம் விவசாய குடும்பம், விவசாயம் செய்து தான் எங்களை பெற்றோர் படிக்க வைத்தனர். நான் D.TED, BA., B.ED., வரை படித்து உள்ளேன். தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லவில்லை, நான் பிறந்து வளர்ந்த இடம் 15வது வார்டு தான்.


இந்த வார்டில் காங்கிரஸ் இரண்டு முறை, திமுக ஒரு முறை, அதிமுக இரண்டு முறை வெற்றி பெற்று உள்ளது, ஆனால் எங்கள் ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளோ, மக்களுக்கு தேவையான வசதிகள், அவர்களுக்கான திட்டங்கள் எதிலும் பயனடைந்தது இல்லை, பின் தங்கியே உள்ளது. முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை,  கழிப்பறை வசதி போன்ற பல திட்டங்களை மக்களுக்கு பெற்று தருவேன். இதனால் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கான திட்டங்களையும்,  தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுப்பேன் என்றார். பொதுவாக அடிப்படை வசதிகள், மக்களுக்கான அரசு திட்டங்களை பெற்று தருதல் போன்றவை எல்லாருடைய வாக்குறுதிகளிலும் இருக்க கூடிய ஒன்று, ஆனால் நான் புதுமையான வாக்குறுதிகளை முன்னிறுத்தியே வாக்குகளை சேகரிக்க உள்ளேன் என்றார். 





"ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்ற சொல்லுக்கு ஏற்ப அவர் வாக்குறுதிகளில் ஒன்றாக  "நான் தேர்தலில் வெற்றி பெற்றால்" முதலில்  என்னுடைய வார்டில் படிக்கும் குழந்தைகளுக்காக இலவச போட்டித்தேர்வு மையங்களை தொடங்கி அவர்களை உருவாக்குவதற்கு  முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். இது போன்ற பல புதுமையான திட்டங்களை முன்னெடுத்தே என்னுடைய வாக்குகளை சேகரிக்க உள்ளேன், விரைவில் புதுமையான மேலும் பல வாக்குறுதிகளை வெளியிடுவோம் என்றார்.  மேலும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கு உணவளிக்கும் விவசாய நிலத்தின் முன்பு தனது வேட்புமனுவை வைத்து வணங்கி விட்டு அரசியல் பயணத்தை தொடங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார், 




விவசாயமும், கல்வியும் தனி ஒருவரின் வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே, இதனை முன்னிறுத்தியே தான் மட்டுமின்றி தன்னை சார்ந்த மக்களின் முன்னேற்றத்தையும் கொண்டு செல்லும் முனைப்போடு தேர்தல் களத்தில் இறங்கியுள்ள பட்டதாரி இளம் பெண்ணும், முன்னாள் ஆசிரியருமான பிரியங்காவிற்கு ஏபிபி செய்தி நிறுவனம் சார்பில் வாழ்த்துக்கள்...