வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்:


நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே ஆத்தூர் குறிச்சியை சேர்ந்த விக்னேஷ்- ரம்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் வழக்கம் போல் காலை பள்ளி சென்ற நிலையில், 3 வயதுடைய  இரண்டாவது மகன் சஞ்சய் வீட்டின் முன்பு காலை 9.30 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது மகனை அங்கன்வாடிக்கு கொண்டு விடுவதற்காக ரம்யா தேடியுள்ளார். அப்போது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணாததால் பதறி போய் அக்கம் பக்கம் உறவினர் வீடு என அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார். ஆனால் எங்கேயும் சிறுவன் கிடைக்காத நிலையில் சிறுவனின் தந்தை விக்னேஷ் இராதாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குடும்பத்தினர் உறவினர்களிடையே விசாரணையை துவக்கினர்.


வாஷிங் மிஷினில் பை ஒன்றில் இருந்த சிறுவன் சடலம்:


பல இடங்களில் காவல்துறையினர் தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் விக்னேஷின் எதிர்வீடு பூட்டி இருப்பதை கண்ட காவல்துறையினர் அது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எதிர்வீட்டில் இருக்கும் பெண்மணியுடன் மனக்கசப்பு இருப்பதால் பேச்சுவார்த்தை கிடையாது என கூறியுள்ளனர். மேலும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு எதிர்வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் என்பவருடைய மகன் விபத்து ஒன்றில் இறந்த நிலையில் நாங்கள் செய்வினை வைத்து தான் அவர் இறந்ததாக பலரிடமும் கூறி வருகிறார் என்றும், தங்கம்மாள் வீட்டினுள் பூட்டிக்கொண்டு இருக்கலாம் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தங்கம்மாள் வீட்டினுள் சென்ற போது தங்கம்மாள் வீட்டினுள் இருந்த வாஷிங் மெஷினில் இருந்து ஒரு பை ஒன்றை எடுத்து வெளியே வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.


தப்பியோடிய பெண்ணை கைது செய்த காவல்துறையினர்:


காவல்துறையினர் அதனை திறந்து பார்த்த போது 3 வயது சிறுவன் சஞ்சய் அதனுள் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தரையில் புரண்டு கதறி துடித்து அழுது உருண்டனர். இது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து தப்பியோடிய தங்கம்மாளை கிராமத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தேடிய நிலையில் அவர் கிராமத்தில் இடிந்த நிலையில் இருந்த வீடு ஒன்றினுள்  ஒளிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை காவல்துறையினர் கைது செய்ய செல்லும் போது தெரியாமல் செய்துவிட்டேன் என்று கை கூப்பியுள்ளார். சுற்றி இருந்த கிராம மக்களும் அவரை தாக்க முயற்சித்த போது அவர்களிடமிருந்து மீட்டு தங்கம்மாளை வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


மனவிரக்தியில் தனிமையில் இருந்த பெண்:


மேலும் இச்சம்பவம் குறித்து அந்த கிராம மக்கள் கூறும் பொழுது, இரு குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில் தங்கம்மாளின் மகன் இறந்த ஈமச்சடங்களில் விக்னேஷின் குடும்பம் பங்கேற்பவில்லை என்றும், அவர்களால் தான் மகன் இறந்ததாகவும் தங்கம்மாள் மனவிரக்தியில் இருந்துள்ளார். மகன் இறந்ததையடுத்து யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்தார். இந்த நிலையில் தான் அதனை மனதில் வைத்துக்கொண்டு பிஞ்சு குழந்தையை இரக்கம் இல்லாமல் கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்தனர். மேலும் இந்த கொலையை தங்கம்மாள் மட்டும் செய்தாரா அல்லது வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் முன் காலை விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு மதியம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.