சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்ற அய்யா வைகுண்டசாமியின் 192வது அவதார தின விழாவில் ஆளுநர் ஆர்என்.ரவி பேசுகையில், சனாதான தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். கால்டுவெல் மற்றும் ஜியு போப் இருவரும் பிரிட்டிஷ் அரசால் மதமாற்றத்துக்காக நியமிக்கப்பட்டவர் என கூறினார். ஆளுநரின் இந்த பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.


ஆளுநரின் சர்ச்சை பேச்சு:


கால்டுவெல் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தமிழகத்தில் தங்கி இருந்து தமிழ் மொழியை ஆராய்ந்து ஒப்பிலக்கணம் எழுதியுள்ளார். கால்டுவெல் ஜியு போப் இருவர் குறித்தும் தமிழக பள்ளி பாட புத்தகங்களில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இது போன்று சூழ்நிலையில் இருவர் குறித்தும் ஆளுநர் பேசிய சம்பவம் பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில் பேராயர் கால்டுவெல் வரலாற்று ஆய்வுக்குழு சார்பில் தென்னிந்திய திருச்சபையின் நெல்லை மண்டல பேராயர் பர்னபாஸ்,  அய்யா வைகுண்டர் தலைமை பத நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் கூட்டாக நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 




தமிழ் பற்று:


அப்போது பேசிய பேராயர் பர்னபாஸ், கால்டுவெல் மிகவும் கல்வி அறிவு பெற்றவர். அயர்லாந்து நாட்டில் பிறந்த கால்டுவெல் 1838 கப்பலில் இந்தியா வந்தபோது தமிழ் பயின்றார். பிறகு 1941 நெல்லை மாவட்டம் இடையன்குடிக்கு வந்தார். சென்னையில் இருந்து குதிரையில் கொடைக்கானல் சென்ற போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் தமிழ் மீதுள்ள பற்றால் கொடைக்கானலில் இருந்து நடந்தே இடையன்குடிக்கு வந்தார். அவர் மிகபெரிய கல்வி மான். இங்கிலாந்தில் பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவரை கல்வி அறிவு இல்லாதவர் என்று ஆளுநர் சொல்வது மிகவும்  வருந்தத்தக்கது.


1856ல் கால்டுவெல் இங்கிலாந்து விக்டோரியா மகாராணியிடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்தியால் அவர் தமிழ், தெலுங்கு, மலையாயளம், கன்னடம் ஆகிய மொழிகளை கற்றாலும் தமிழ் மொழி தான் சிறந்த மொழி என மற்ற மொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்பிலக்கிணத்தை இவர் எழுதியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் குறித்த புத்தகத்தையும் எழுதியிள்ளார். எல்லாவற்றையும  கற்று தேர்ந்த கல்வி மான் அவர். எனவே ஆளுநர் அறியாமையில் பேசுகிறார் என்றார்.




வரலாறு தெரியாமல் பேசும் ஆளுநர்:


தொடர்ந்து பால பிரஜாபதி அடிகளார் அளித்த பேட்டியில், கால்டுவெல் பல மொழிகளை கற்று தமிழ்மொழி சிறந்தது என்று சொன்னார். தமிழை அழிக்க வேண்டும் தமிழ் வளர்ச்சியை கெடுக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் இதுபோன்று பேசுகிறார். அய்யா வைகுண்டசாமி சாதிக்கு எதிராக போராடி சிறையும் பெற்றார். ஆளுநர் வரலாறே தெரியாமல் வரலாறு படைக்க கூடாது. அய்யா வைகுண்டர் சனாதானத்தை காக்க பிறந்தவர் என்கிறார். சனாதானத்தில் இருந்து மக்களை விடுவிப்பது தான் அய்யா வழி.


கவர்னர் பதவியை எடுத்து விட வேண்டும். தேவையில்லாத பதவி தேவையில்லாத பிரச்னை. ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து ஏற்கனவே நாங்கள் போராட்டக் களத்தில் தான் இருக்கிறோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம். இந்துக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார். இது குறித்து நன்கு அறிந்த தமிழிசை சௌந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன் போன்றோர் அமைதி காக்கின்றனர். குரல் கொடுக்க வேண்டியவர்கள் குரல் கொடுக்கவில்லை. அந்த விழாவில் ஆளுநர் மாளிகைக்கு சென்றவர்கள் ஒரிஜினல் ஐயா வழியை சேர்ந்தவர்கள் அல்ல. அரசர்கள் காலத்தில் தான் இது போன்ற அடக்குமுறையை சந்தித்தோம். தேர்தல் நேரத்தில் பொதுவாக வடநாட்டுக்காரர்கள் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அதைத்தான் ஆளுநர் செய்துள்ளார் என தெரிவித்தார்.


முன்னதாக கால்டுவெல் பட்டம் பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட்டனர். குறிப்பாக அவர் 1856 இல் டாக்டர் பட்டம் பெற்றதற்கான சான்றிதழை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.