இந்து மதத்தில் சந்நியாசம் என்ற நிகழ்வு பெரும்பாலும் மதக் கோட்பாட்டின் இன்றியமையாத அம்சமாகக் கருதப்படுகிறது.  ஆனால், ராமநாதபுரத்தில் பெண் துறவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்கு வங்கிக்காக நடத்தப்பட்ட சம்பவமா என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்து நடை பயணமாக வந்த இளம் பெண் துறவியிடம், பரமக்குடி அருகே  அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
  

 

உ.பி., மாநிலம் அயோத்தியில் இருந்து ஷிப்ரா பதக்(38) என்ற பெண் துறவி அவரது  தந்தை மற்றும் சகோதரருடன் ராமேஸ்வரம் நோக்கி தென் மாநிலங்கள் வழியாக நடை பயணமாக வந்து கொண்டிருக்கின்றனர். வரும் வழியில் உள்ள சைவ,  வைணவ ஆலயங்களையும் அவர்கள் வழிபட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வந்தடைந்தனர்.



 

நேற்று சிவராத்திரி என்பதால் அப்பகுதியில் உள்ள  சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டனர்.  பின்னர் இரவு பரமக்குடியில் தங்கிவிட்டு இன்று காலை அங்கிருந்து புறப்பட்டனர். ஷிப்ரா பதக் வழக்கம்போல் நடைபயணமாக சென்று கொண்டிருந்தார்.  இவர்களின் கார் உடமைகளுடன் பின்னால் வந்து கொண்டிருந்தது. பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி இடையே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த அடையாளம் தெரியாத 8 நபர்கள் காரை நிறுத்தி இவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்

 

அப்போது  அதிக ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஷிப்ரா பதக்கின் காரின் மீது தாக்குதல் நடத்தினர். காரின் இடது பக்க கண்ணாடி மற்றும் வாகனத்தில் கட்டியிருந்த ராமர் கொடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் பயந்துபோன ஷுப்ரா பதக் உடனடியாக பரமக்குடி காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.



 

அவரது  புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பரமக்குடி போலீஸார்  விசாரணை மேற்கொண்டனர். மேலும் காரில் வந்த அந்த நபர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் துறவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.