ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்புக்கான மைய கருத்து உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் தங்கள் அலங்கார வாகனங்களின் மாதிரிகளை அனுப்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தும். அதன்படி, அனைத்து மாநிலங்களும் 10-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளைத் தயாரித்து புகைப்படம் அல்லது வரைகலை வடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவிடம் டெல்லியில் நேரடியாக வழங்குவார்கள். அத்துடன், அதில் இடம்பெறும் தலைவர்கள் படம், இதர விவரங்கள் அனைத்தையும் விளக்குவார்கள். அதில் மாற்றங்கள் செய்ய அதிகாரிகள் குழுவினர் அறிவுறுத்தினால், தமிழக செய்தித் துறை அதிகாரிகள் அங்கேயே மாற்றங்கள் செய்து காட்டுவார்கள். இப்படி மத்திய அரசு அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படும் வரை மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதியாக ஒரு வடிவம் முடிவு செய்யப்படும். அதன்பிறகு, அலங்கார வாகனம் தயாரிக்கப்படும்.




இந்த நிலையில் தற்போதும் இதுபோல சுதந்திரப் போராட்டம் அடிப்படையில் புகைப்படங்களுடன் கூடிய அலங்கார வாகனம் தொடர்பான மாதிரி படம் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட நிலையில், 3 சுற்றுகளாக அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. 4-வது சுற்றுக்கு தமிழக வாகனம் தேர்வு செய்யப்படுவது தொடர்பான தகவல் கிடைக்காத நிலையில், அதிகாரிகள் கேட்டபோது, கொரோனா பரவல் காரணமாக அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரதியார் தவிர வஉசி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரைப் பற்றி யாருக்கும் தெரியாது என்பதாலேயே தமிழக அரசின் வாகனம் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்த நிலையில் இந்த ஆண்டு நடக்கும் அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில்  சுதந்திரப்போராட்ட வீரர்கள் வ.உ.சி, மருதுபாண்டிய சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதியர்  உள்ளிட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள் இடம்பெறும் அலங்கார வாகனம் அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதி வழங்காததிற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் நெல்லையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




ஆர்பாட்டத்தில் நூதன முறையில் வ.உ.சி, வேலுநாச்சியார், உள்ளிட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள் போன்று தத்ரூபமாக வேடம் அணிந்து கலந்து கொண்டனர். சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுக்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தினர்,  மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அலங்கார வாகனத்தை நிராகரித்த ஒன்றிய அரசைக் கண்டித்து  முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் .  இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .