வள்ளியூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி தெற்கு மாவட்டம் சார்பில் வணிகர்கள் எழுச்சி மாநாடு நடந்தது. வள்ளியூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கார்த்தீசன், மாநில இணை செயலாளர்கள் தங்கையா கணேசன், திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆசாத் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ராஜன் மாநாட்டு தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வள்ளியூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், வணிகவரித்துறையின் டெஸ்ட் பர்சஸ் மற்றும் செஸ் வரி விதிப்பு நீக்க வேண்டும். வள்ளியூர் பேருந்து நிலையம் மற்றும் சந்தை கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வள்ளியூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். வள்ளியூர் கேசவனேரி சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். ஏர்வாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டும். களக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்பு செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்ததாவது, "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே ஐந்தாம் தேதி மாநில அளவில் நடக்கும் மாநாட்டிற்கு முன்னோட்டமாக திருநெல்வேலி நடக்கும் இந்த மாநாடு அமைந்துள்ளது. ஈரோட்டில் நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டிற்கு இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை கடுமையாக தொந்தரவு செய்து வருகிறார்கள். குறிப்பாக லைசென்ஸ் முறை என்பது நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் அபராதம் என்ற பெயரில் வசூலிப்பதை கட்டாயமாக திரும்ப பெற வேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை லைசென்ஸ் புதுப்பிக்கும் முறையே மாற்றி ஓர் ஆண்டாக மாற்றி இருப்பது அதையும் திரும்ப பெற வேண்டும். நகை கடைகளில் வெளியூரிலிருந்து யாராவது ஒரு திருடர்கள் திருடி விட்டு இந்த கடை தான் என்று கையை காட்டினால் அதை முறையாக விசாரிக்காமல் போலீசார் ஒரு அணுகுமுறையோடு செய்யாமல் அத்துமீறலோடு நடந்து கொள்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற அதிகாரிகள் வியாபாரிகளை கனிவோடு பார்க்கவில்லை என்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸ் டிஜிபியை சந்தித்து புகார் கொடுப்போம் என்பதனை எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்