குமரி மாவட்டத்தில் பூக்கள் அறுவடை தொடங்கி உள்ளது. கேரள மக்களின் வசந்த விழா 10 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் அதிக அளவில் ஆர்டர்கள் குவியும் என்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

கேரள மக்களின் வசந்த விழாவான ஓணம் பண்டிகை வருகிற 31ம் தேதி தொடங்கும் நிலையில் தோவாளை பகுதியில் பூக்கள் அறுவடைக்கு தயாராகி வருவது வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கேரள மாநிலம் மற்றும் தென்தமிழகத்திலும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தியின் கோபத்தை அடக்கிட திருமால் வாமனராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக கேட்டு உள்ளார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி ஒத்துக்கொண்டதையொட்டி முதல் அடியில் பூமியையும், 2ம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், 3ம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தனது மக்களைக் காண அருள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 



 

அதனை ஏற்று வாமனர் அருள் புரிந்தார். அதன் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளே ஓணம் எனும் திருவோணத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஓணப்பண்டிகையின் முக்கிய இடத்தை அத்தப்பூ கோலங்கள் அலங்கரிக்கின்றன. ஓணம் பண்டிகை கேரளாவில் 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் வீடுகளில் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்று அத்தப் பூ கோலங்கள் போடப்படுவது வழக்கம். இந்த கோலத்திற்கு பயன்படுத்தப்படும் பூக்கள் பெரும்பாலும் குமரி மாவட்டம் தோவாளையில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகிறது.

 



 

இதற்காக டன் கணக்கில் பூக்களை கேரள வியாபாரிகள் வருடம் தோறும் ஆர்டர் கொடுப்பது வழக்கம். இந்த வருடத்துக்கான ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பூக்கள் ஆர்டர் அதிக அளவில் வருவதாக வியாபாரிகள் கூறினர். ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரம் அன்று தொடங்கும். இந்த வருடம் அஸ்தம் நட்சத்திரம் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. ஓணம் பண்டிகை தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருக்கும் பூச்செடிகளில் இருந்து பூக்கள் அறுவடை தொடங்கப்பட உள்ளது.

 

தோவாளை, ஆரல்வாய்மொழி, லாயம், செண்பராமன்புதூர், குமாரபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கிரேந்தி, செவ்வந்தி, சிவப்பு கிரேந்தி, அரளி, பன்னீர் பூ, கோழிப்பூ, மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட பூ செடிகளில் இருந்து பூக்கள் அறுவடை தொடங்கப்பட்டு உள்ளது.

 

கடந்த 2 வருடமாக கொரோனா பாதிப்பால் போதிய அளவு பூக்கள் விற்பனை இல்லை. இந்த வருடம் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரள மக்கள் ஆயத்தமாகி வரும் நிலையில் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என பூ விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.