நெல்லை டவுண் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (77). 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் நாள் ந.சு.சுப்பையான்டுபிள்ளை - முத்து லட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். இவருடன் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர் ஆவர். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் நெல்லையை தனது அடையாளமாக கொண்டு அனைவராலும் நெல்லை கண்ணன் என்று அழைக்கப்பட்டவர்.  தமிழ் மொழி மீதும், இலக்கியம் மீதும் அதிக ஆர்வம் கொண்ட இவர் தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்டார். சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர், பட்டிமன்ற நடுவர் பேச்சாளர், இலக்கியவாதி என பன்முக திறமை கொண்டவர். கடந்த ஒரு வாரமாக சாப்பிட முடியாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்த நிலையில் இன்று அவர் காலமானார். 




இவர் தமிழ்க்கடல், நாவுக்கரசர், இலக்கிய இமயம், இலக்கிய பேரரசு, இயற்றமிழ் இமயம், பொதுமறை அறிஞர், நெல்லை காளமேகம், நெல்லை நக்கீரன், கம்பக் காட்டாறு, வாழும் வாரியார், இளங்கோஅடிகள் என அன்பு மொழியால் அழைக்கப்பட்டவர். குறுக்குத்துறை இரகசியங்கள் 1, குறுக்குத்துறை இரகசியங்கள் 2, வா மீத முலை ஏறி (கவிதை நறுக்குகள்), வடிவுடைக் காந்திமதியே (மரபுக்கவிதை), காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் (புதுக்கவிதை), திக்கனைத்தும் சடை வீதி (மரபுக்கவிதை) , பழம் பாடல் புதுக்கவிதை உள்ளிட்ட படைப்புகளை எழுதியவர்..


நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர். 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார். இதனால் இவர் அடிக்கடி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வது ”நான் கருணாநிதியை எதிர்த்து நின்னவண்டா” என்பது தான்




 






நெல்லை வழக்காடு மொழிக்கேற்ப  தனது பேச்சில் அவன் இவன் என சாதாரணமாக தான் பேசுவார். அதனால் இவரது பேச்சு அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். மேலும் பொது மேடையில் சர்ச்சையாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பாக கடந்த குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நெல்லையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்த காரணத்தால் 2020 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதிமுகவிலும் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்திருந்தாலும், சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவாகவே பொது மேடைகளில் பேசி வந்தார். சமீபத்தில், முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை 79 வயது கிழவன் நொந்து போயுள்ளேன் இறந்து போகலாம் என நினைக்கிறேன் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.


2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் தமிழ் இலக்கியங்களில் மிகப் பெரிய புலமை பெற்றவரும், தமிழ்க்கடல் என அழைக்கப்படுவருமான நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருது முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




 


பேச்சுத் திறனால் பலரையும் ஈர்த்த நெல்லை கண்ணனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் அவரது இல்லத்திலும் மறைந்த நெல்லை கண்ணனுக்கு  நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான். சமய நிகழ்ச்சியாக இருந்தாலும், பட்டிமன்றமாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார். இந்த வீட்டிற்கு ராஜீவ் காந்தி வந்து உணவு அருந்தி விட்டு சென்றதாகவும் என்னிடம் தெரிவிப்பார். காமராஜரை தனது அரசியல் வாழ்வில் கொள்கையாகக் கொண்டு காங்கிரஸில் செயல்பட்டவர். அவரது இறப்பு என்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமயம், இலக்கியம், பட்டிமன்றம் எதுவாக இருந்தாலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆற்றல் மிக்கவராக இருப்பார். அரசியலில் அவருக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிடைக்காமல் சென்று விட்டாலும் அவரை எல்லோரும் மதித்தார்கள். நெல்லை மாவட்ட மக்களின் மனநிலையில் அவர் ஒருபோதும் மறைவதில்லை.  நெல்லை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர்,  நெல்லை இருக்கும் வரை நெல்லை பெயரை சொல்லுகிற வரை கண்ணனின் பெயரும் நினைவுக்கு வரும். இந்த இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி நெல்லைக்கு பெரிய இழப்பாக உள்ளது  என தனது இரங்கலை தெரிவித்தார்.


தமிழக அரசின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று மாலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர் எஸ். ராஜ கண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து நாளை அவரது உடலுக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ள நிலையில் மதியம் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.