தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் மற்றும் மீனவ கிராமங்களில் உள்ள ஆலயங்கள், மீன் ஏலகூடம் உள்ளிட்ட பொது இடங்கள் விடுபட்டு உள்ளன. பெரும் முதலாளிகள், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த வரைபடத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பாரம்பரிய மீனவர்கள் தரப்பில் இடம் பெற்றுள்ள 3 பேரை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள். அவர்களை தேர்வு செய்தது குறித்து பகிரங்கமாக ஏன் அறிவிக்கவில்லை.




மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை தவறாமல் நடத்த வேண்டும். கடற்கரை பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.




இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசும் போது, கடந்த மூன்று மாதங்களாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த முயற்சி செய்தும், பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் போய்விட்டது. இனிமேல் மாதம் தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தவறாமல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை யாரும் பேச வேண்டாம். யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கலாம். அதிகாரிகள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை முழுமையாக அறிந்தே நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு காரணமாகவே அமலிநகரில் தூண்டில் வளைவு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அமலிநகரில் விரைவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது என்று கூறினார்.




மேலும் கூட்டத்தில் மீனவர்கள் கருத்துக்களை கேட்டறிவதற்காக பாரம்பரிய மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி விளக்கம் அளித்தும் மீனவர்கள் தொடர்ந்து எழுந்து நின்று பேசினர். அப்போது மீனவர்களுக்கு இடையே சிறு வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மீனவர்களை சமாதப்படுத்தினர். அப்போது, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எழுந்து, மீனவர்களின் குறைகளை கேட்டறிவதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மீனவர்கள் தங்கள் குறைகளை, கருத்துக்களை அமைதியான முறையில், சரியான வழியில் தெரிவித்தால் அதிகாரிகள் உரிய பதிலை அளிப்பார்கள். எனவே, மீனவர்கள் தங்கள் குறைகளை அமைதியாக தெரிவியுங்கள் என்றார்.