தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரத்தில் உடைந்து பல ஆண்டுகளாகியும் பாசன கண்மாய் மடைகள், கண்டுகொள்ளாத ஊரக வளர்ச்சி துறை, சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.




தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஊரணிகள், குட்டைகள், சிறுபாசன குளங்கள், பொதுப்பணித்துறை பாசன குளங்கள் உள்ளன. கீழக்கரந்தை பாசன குளம் புதூர் வட்டார ஊராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இப்பாசன குளத்திற்கு வெம்பூர், அழகாபுரி, கோடாங்கிபட்டி, மேலக்கரந்தை கிராமங்களில் மழைக்காலத்தில் பெய்யக்கூடிய மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இங்கு வந்தடைகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நீர்வரத்து வழியை கண்டறிந்து இப்பாசன கண்மாய் வெட்டப்பட்டது




ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பெய்யக்கூடிய மழைக்கு பெருகிவிடும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இருபோகம் சாகுபடி செய்யப்பட்டது. தவிர இக்கண்மாயின் தென்புறத்தில் பல்வேறு விவசாய கிணறுகள் உள்ளன. இக்கண்மாயில் தண்ணீர் பெருகும் போது  கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் கிணற்று பாசனம் மூலம் கோடையில் சாகுபடி செய்யப்பட்டது. இக்கண்மாயின் நீர் பிடிப்பு சுமார் 300 ஏக்கராகும். இதன் ஆயக்கட்டு சுமார் 150 ஏக்கராகும். இதில் தலைமடை, ஊடுமடை, கடைமடை என மூன்று மடைகள் உள்ளன. பல ஆண்டுகளாக இக்கண்மாய் தூர்வாரப்படாததால் மண்மேடாகிவிட்டது. கடந்த வருடம் இக்குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ள ஏட்டளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால்அனுமதி வழங்கப்பட்டது. வண்டல் மண் எடுக்க விவசாயிகள் முறையாக அனுமதி கோரியபோது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாலும், கெடுபிடிசெய்யப்பட்டதாலும், கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போன துபோல் வண்டல் மண் எடுக்க முடியாமல் போய்விட்டது




இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, "இக்குளத்தில் பல ஆண்டுகளாக மடைகள் சேதமடைந்து தண்ணீர் வயலுக்கு  செல்லமுடியாமல் அடைப்பட்டுகிடக்கிறது. தவிர சிமென்ட் வாய்க்கால் உடைந்து காணப்படுகிறது. தவிர மடை சற்று உயரமாக இருப்பதால் குளத்திலிருந்து தண்ணீர் வயல்களுக்கு செல்லமுடியவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடமும், ஊரக வளர்ச்சித் துறையினரிடமும் கோரிக்கை வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்பாசன குளம் தூர்வாரி மடைகள் பழுதுநீக்கி, புதிய சிமென்ட் வாய்க்கால் அமைத்து மீண்டும் பாசன பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.