தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டாக வந்து பார்வையிட்டு சென்று இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நிவாரணங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாத்திருக்கலாம், ஆனால் விடியா திமுக முதல்வர் வீர வசனம் பேசுகிறார். கடந்த 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அது இந்த முதல்வர் கண்ணுக்கு தெரியவில்லை. ஏதோ மத்திய குழு வந்ததாம், பார்வையிட்டதாம், பாராட்டி விட்டு சென்றதாம். அங்குள்ள மக்களை கேட்டால் தான் என்ன பாராட்டு இந்த அரசுக்கு கிடைக்கும் என முதல்வருக்கு தெரியும். தூத்துக்குடியில் கனமழை பெய்தால் அந்த நீரெல்லாம் பக்கிள் ஓடை வழியாக செல்லும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சியில் 85 % பணிகள் முடிவடைந்தது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்று 2.5 ஆண்டுகளில் எஞ்சிய 15% பணிகளை கூட நிறைவேற்றவில்லை. இதனால் அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாத சூழலில் இருக்கின்றனர். எனவே அதிமுக கொண்டு வந்த திட்டத்தை விரைந்து முடித்து செயல்படுத்தியிருந்தால் அந்த ஓடை வழியாக பெய்த மழை நீர் வடியத் துவங்கி இருக்கும்.
மழை வெள்ளத்தால் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கன மழையால் சேதமடைந்திருக்கின்றன. இதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த அந்த நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு பழுது பார்த்து கொடுக்க வேண்டும். விவசாயிகள் கனமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு மெத்தனப்போக்கை விட்டு விட்டு வேகமாக துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்துகிறேன்.
நெல்லையில் பெய்த மழையில் பாதிக்கப்பட்டு இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. அவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சாலைகள், தகவல் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அதனையும் உடனடியாக சீர்செய்ய வேண்டும். நெல்லை, தூத்துக்குடியில் மக்கள் சொல்வதெல்லாம் உணவு, தண்ணீர், பால், மருத்துவம் போன்றவை கிடைக்கவில்லை என்பது தான், இனியாவது இந்த அரசு தூங்கிக்கொண்டு இருக்காமல் விழிப்போடு வேகமாக துரிதமாக செயல்பட வேண்டும். இது மக்களின் பிரச்சினை. இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் காட்சி வெட்கக் கேடானது. தலைமைச் செயலாளர் 600 படகு விட்டதாக சொல்கிறார். ஒரு படகு கூட வரவில்லை. ஆனால் இந்த அரசு மக்களை பார்த்தோம், உணவு வழங்கினோம் என பச்சை பொய் சொல்கின்றனர். மக்களின் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக சொல்லவில்லை என முதல்வர் சொல்கிறார். அவர்கள் சரியாகத்தான் சொன்னார்கள். இந்த அரசு செயலற்று இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் வேதனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் டெல்லிக்கு நிவாரணம் கேட்க போகவில்லை, இந்திய கூட்டணியில கூட்டத்தில கலந்து கொள்ளதான் சென்றார். மக்கள் பிரச்சினையை தீர்க்க போகவில்லை, அவருடைய நோக்கம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணில எப்படி செயல்படலாம் என கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். செய்த ஊழலெல்லாம் மத்தியிலே ஆட்சிக்கு வந்துவிட்டால் மறைக்கப்படலாம் என்ற அடிப்படையில் அவர் செயல்பட்டார் என தெரிவித்தார்.
அற்புதமான குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டதன் விளைவு தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தமிழக அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சென்னை வெள்ளத்தில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு முன்பதாகவே நாடாளுமன்றத்தில் திமுக எம் பி டி ஆர் பாலு நிவாரண தொகை கேட்பதாக பாதிப்புகளை கணக்கிடாமல் டி ஆர் பாலு நிவாரணத் தொகை கேட்பது வேடிக்கையான ஒன்று என்று விமர்சனம் செய்தார். தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டாக வந்து பார்வையிட்டு சென்று இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்