தென் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த பெரு மழையால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து, மீட்புப் பணிக்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது.


டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


இதற்கிடையே பாதிப்பு காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. 


இந்த நிலையில், மீட்புப் பணிக்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை


முன்னதாக மழை பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தூத்துக்குடிக்கு ஆய்வுக்குச் சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.


முதல்வர் தூத்துக்குடி செல்கிறார்


மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடி செல்கிறார்.