நாகப்பட்டினம் - தூத்துக்குடி இடையே 332 கிலோ மீட்டருக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட இருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் ஒய். ஏ. ராவுத்.
தூத்துக்குடியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப்பிரிவு இயக்குநர் ஒய்.ஏ.ராவுத் பேசுகையில், “தூத்துக்குடி துறைமுகம் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி-மதுரை சாலையில் ஸ்டெர்லைட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணி வரும் பிப்ரவரி மார்ச் மாதத்திற்கு முடிக்கப்படும், தூத்துக்குடி -திருநெல்வேலி சாலையில் புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் மேம்பால பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்கப்படும் வல்லநாடு பாலத்தை சரி செய்யும் பணி 14 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அவை விரைவாக முடிக்கப்படும்.
நாகப்பட்டினம்-தூத்துக்குடி இடையே 332 கிலோ மீட்டருக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக நான்கு வழி சாலை பணியானது அரசின் ஒப்புதலை பெறப்பட்டு செயல்படுத்தப்படும் இதன் மூலம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். இது சென்னைக்கு ஒரு மாற்று வழிச்சாலையாக அமையும்.
இந்த சாலையில் எந்தெந்த பகுதிகளில் விமானம் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகள் என்பதை விமானப்படை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளனர். அதன்படி நாகப்பட்டினத்தில் இருந்து 198 கிலோ மீட்டர் தொலைவிலும், 203 கிலோ மீட்டர் தொலைவிலும் விமானங்கள் இறங்கும் வகையில் ஓடுதளமாக, சாலை அமைய உள்ளது. இந்த பகுதிகள் ராமநாபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் பகுதிகளுக்கு வருகிறது. இந்த இடங்களில் விமானப்படை விமானங்கள் இறங்குவதற்கு வாய்ப்பான இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் சாலை நேராகவும், குடியிருப்புகளை விட்டு தொலைவிலும் அமைந்து உள்ளது. இதனால் அவசர காலத்தில் ராணுவ தளவாடங்களை விரைவாக கொண்டு செல்வதற்கும், விமானப்படை விமானங்கள் ரோட்டில் தரையிறங்குவதற்கும் வசதியாக இருக்கும் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிக்கும், துறைமுகத்தை இணைத்து சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சாலை திட்டமிடப்பட்டு உள்ளது. நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை ஏற்கனவே உள்ள கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 37 பெரிய பாலங்கள், 68 சிறிய பாலங்கள், 668 சிறிய ஓடை பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. 4 இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து வரும் வகையில் அமைக்கப்பட உள்ளது” என்று கூறினார்.