ராகுல் காந்தி புகழை கெடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்சியினரின் தூண்டுதலின் பெயரில் கேலிச் சித்திரம் வரைந்ததை கண்டித்து,  காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை வகித்தார். இதில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் காந்தியின் பெயரை சொல்லவே மறுக்கிறார்கள்.  இதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தியின் பெயரையும் கூற அச்சப்படுகிறார்கள். இதன் வெளிப்பாடுதான் பாராளுமன்றம் மற்றும் வீடு ஆகியவற்றிலிருந்து வெளியேற்றினர்.


இதனை ராகுல் காந்தி நீதிமன்றம் மூலம் வெற்றி கண்டார். இதனால் பாஜக கட்சியினர் தோல்வியடைந்தனர்.  மேலும் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, என செய்தி ஊடகங்கள் மூலமாக அறிவித்து வருகின்றனர். இதனால் ராகுல் காந்தியின் பெயரை கொச்சைப்படுத்துகிறார்கள் . மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள சிபிஐ, இ.டி. ஆகியவற்றின் மூலம் எதிர்க்கட்சிகளின் மீது ரைடு நடத்தி  ஒரு சிலரை கைது செய்து அச்சப்படுத்தி வருகின்றனர். 




மேலும், வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தியை பத்து தலை ராவணனோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தி கேலி சித்திரம் வரைந்த பாசிச பாஜக மற்றும் RSS கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என தெரிவித்தார்.


மேலும்  ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாமன்ற உறுப்பினர்கள் ரேக்ஸ், சோபியா விமலா ராணி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர்கள் தொட்டியம் சரவணன், வக்கீல் சரவணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றம் அருகே உள்ள பிஜேபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதை அறிந்த பாஜக கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர்.


இதை அறிந்த காவல்துறையினர் இரு கட்சியினர் இடையே அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.