தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்தது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க தனித்தனியாக கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 1491 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 13 லட்சத்து 89 ஆயிரத்து 719 வாக்காளர்கள் தற்போது வரை பதிவு செய்துள்ளனர். 16.03.2024 வரை புதிய வாக்காளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உட்பட 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. ஆறு தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 நபர்களும் ஆண் வாக்காளர்களும் 8 லட்சத்து 44 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்களும் 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தொடர்பாக 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதே போல புகார் தெரிவிக்க  சி-விஜில் ஆப் ஐயும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.  நெல்லை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படை மூன்று நிற்கும் படை ஆகியவை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 1810 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 333 பதட்டமான வாக்குச்சாவடிகளும், 13 மிகவும்  பதட்டமான வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 346 வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 85-99 வயதுக்கு மேற்பட்ட தபால் வாக்குகள் பெரும் வாக்காளர்களாக 23,100 பேர் கண்டறியப்பட்டுள்ளது. நூறு வயதுக்கு மேற்பட்டோர் என 795 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சமூக வலை தலங்களை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தில் முறையாக அனுமதி பெறப்பட வேண்டும்.  அதற்கென தேர்தல் ஆணைய வழிமுறைகள் உள்ளது என்று தெரிவித்தார்.