தூத்துக்குடி - மாலத்தீவு இடையே புதிய நேரடி கப்பல் சேவையை மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்கு பயணம் செய்த போது, இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று உறுதி அளித்து உள்ளார். அதனை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு பெட்டக கப்பல் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய கப்பல் கழகத்தால் எம்.எஸ்.எஸ்.கலேனா என்ற சரக்கு பெட்டக கப்பல் மாலத்தீவுக்கு இயக்கப்படுகிறது. இந்த கப்பல் மாதத்தில் 3 முறை இயக்கப்படுகிறது. கப்பல் 421 சரக்கு பெட்டகங்கள் மற்றும் மொத்த சரக்குகளை எடுத்து செல்லும் திறன் கொண்டது.
இந்த கப்பல் சேவை தொடக்க விழா வ.உ.சி. துறைமுகத்தில் நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிமல்குமார் ஜா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கலந்து கொண்டு புதிய கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த கப்பல், முதல் பயணத்தின் போது 270 சரக்கு பெட்டகங்களுடன் புறப்பட்டது. நாளை கப்பல் மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தை சென்றடையும்.
விழாவில் மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசும் போது, “இந்தியா- மாலத்தீவு இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவு மேம்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் மாலத்தீவுக்கு சென்ற போது இந்தியா- மாலத்தீவு இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி- மாலத்தீவு இடையே முதலாவது நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து கடந்த 2020 செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவைக்கான ஒப்பந்தம் 2022 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. தற்போது மீண்டும் தூத்துக்குடி- மாலத்தீவு இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு உ ள்ளது. இந்த கப்பல் சேவைக்கான ஒப்பந்தம் ஓராண்டுக்கு போடப்பட்டு உள்ளது. அதன்பிறகு தொடர்ந்து ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு கப்பல் சேவை தொடர்ந்து நடைபெறும்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த கப்பல் போக்குவரத்து மூலம் பிரதமர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாலத்தீவு இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு அருகே உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே இனம், மொழி, கலாச்சாரம் மற்றும் வணிக ரீதியாக பல நூற்றாண்டுகளாக தொடர்பு உள்ளது. இரு நாட்டு வணிக உறவை மேம்படுத்தும் வகையில் இந்த கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக மத்திய கப்பல் துறை அமைச்சகம் ரூ.37.26 கோடி செலவு செய்து உள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் மேம்படும். இந்த பிராந்தியத்தில் கடல்வழி பாதுகாப்புக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தூத்துக்குடி- மாலத்தீவு கப்பல் போக்குவரத்தை தொடர்ந்து கொச்சி- மாலத்தீவு இடையேயும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்” என்றார்.
விழாவில் வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேசும் போது, ”வ.உ.சி. துறைமுகம் குறைந்த செலவில் நிறைந்த சேவைகளை வழங்க உறுதிபூண்டு உள்ளது. இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 323.9 மில்லியன் டாலர்களாக அதிகரித்து உள்ளது. இரு நாடுகளின் வர்த்தக சமூகத்தை இணைப்பதில் இந்தி கப்பல் சேவை முக்கிய பங்கு வகித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா, மாலத்தீவின் 3-வது பெரிய வர்த்தக பங்காளியாவதோடு, நம்பகமான கடல் வர்த்தக போக்குவரத்து இணைப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றுமு் வணிகத்தை மேலும் மேம்படுத்தும்” என்றார்.
விழாவில் மாலத்தீவுக்கான இந்திய உயர் ஆணையர் முனுமஹவர், மாலத்தீவு போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துக்கான இணை மந்திரி எச்.இ. அகமது சூஹைர், துணை மந்திரி எச்.இ. ஹமாத் அப்துல்கான், இந்தியாவுக்கான மாலத்தீவு உயர் ஆணையர் இப்ராஹிம் ஷாஹீப், மாலத்தீவு இணை துறைமுகங்கள் கேப்டன் முகமது நாஜீம் ஆகியோர் மாலத்தீவில் இருந்து கானொலி காட்சி மூலம் பங்கேற்றனர். விழாவில் இந்திய கப்பல் கழக தலைவர் பி.கே.தியாகி, தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் திவாகர்,துறைமுக உபயோகிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.