நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாகவும், காய்ச்சல் சிகிச்சை வார்டுகளில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாகவும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் தொடர்பாகவும் மருத்துவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் கூறும் பொழுது, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் வகையில் 120 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சைக்காக 60 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கை வசதியில் தீவிர சிகிச்சைக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சிகிச்சை பெரும் வகையில் தனியாக 55 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெரும் வகையில் ஐந்து படுக்கைகள் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வார்டை தனியாக கண்காணிப்பு செய்ய சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து தொடர் கண்காணிப்பு பணியும் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் சுகாதார சுற்று பணிகள் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணிகளும் காலை மாலை இருவேளைகளிலும் மருத்துவ கல்லூரி வளாகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.


டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சலுக்கான தரமான மருந்துகள் கையிருப்பு அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு டெங்கு பரிசோதனை உட்பட ஏழு வகையான ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தேவைப்படும் ரத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கையிருப்புகள் வைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் யார் சிகிச்சை வந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவமனையை நேரில் அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருந்தகங்களில் தனியாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உட்பட 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஏழு வகையான ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு காய்ச்சல் யாருக்கும் இல்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டெங்கு பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் சிகிச்சை பெற்றார்கள், அவர்களும் நல்ல முறையில் சிகிச்சை முடித்து நல்ல உடல்நிலையுடன் வீடு திரும்பி உள்ளனர் என தெரிவித்தார்.