தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கம்போல் இன்று நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடைபெறும் முதல் குறைதீர் கூட்டம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வந்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சாமிநத்தம், நடுவக்குறிச்சி, சுந்தரலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் மனு அளித்தனர்.

                                  

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போராட்டம் துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிராக நூறாவது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டோர் சென்ற போது கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூட்டின் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து மே 28 ஆம் தேதி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.                      
                                   

 

 

கொரோனா தொற்றுக்கான இரண்டாம் அலை பரவலின் போது மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்ட நிலையில், ஆக்சிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற உடன் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சாமிநத்தம், நடுவக்குறிச்சி, சுந்தரலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் மனு அளித்தனர்.


                            

 

இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாக எங்களது கிராம மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்களில் பலர் வெளியூருக்குச் சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. அங்கேயும் எங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்காததால் எங்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் கிராமத்தில் பல பெண்கள் பயன் பெற்று வந்தனர். குறிப்பாக திருமண உதவித் தொகையாக 10,000 ரூபாயும் இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளில் ஈம காரியங்களை செய்ய பத்தாயிரம் ரூபாயும் நிதி உதவி அளித்து வந்தனர். இதுமட்டுமின்றி குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட 2,500, குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி,  மருத்துவ முகாம், பெண்களின் சுய தொழில் முன்னேற்றத்திற்காக நாப்கின் தயாரிக்கும் பயிற்சி பட்டறை ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்து 25 மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களை பயன் பெற வைத்தனர். சமீபத்தில் கூட கிராமப்புற படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர். எனவே ஒரு சிலரின் சதி செயலால் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கும் நிலை நீடித்தால் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு கொண்டுவர நீண்ட காலம் ஆகும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.