தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், இறுதி கட்ட விற்பனை மற்றும் கடை வீதிகளில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம் என முக்கிய வீதிகள் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. குறிப்பாக  நெல்லையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.


தீபாவளி பண்டிகையை பட்டாசு கொண்டாடி வரும் நிலையில், இன்று காலை முதல் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி மற்றும் மீன்களின் விலையும் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 


முன்னதாக, மாநகரில் ஜவுளி, பூக்கள், பட்டாசு மற்றும் பலகாரங்கள் போன்ற பொருட்களின் விற்பனை சூடு பிடித்தது. நெல்லையை பொறுத்தவரை டவுண் நெல்லையப்பர் சன்னதியின் நான்கு ரத வீதிகள் மாவட்டத்தின் முக்கிய ஜவுளி விற்பனை மையமாக இருக்கிறது. இங்கு முன்னணி ஜவுளி கடைகள் முதல் ஏழை நடுத்தர மக்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு சிறு சிறு கடைகளும் ஏராளம் உள்ளன. எனவே நெல்லை மாநகரம் மட்டுமல்லாமல் பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த பொதுமக்களும் தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க இங்கு படையெடுத்தனர். நேற்று மட்டுமின்றி இன்றும் தீபாவளிக்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 



வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை போன்ற பகுதியிலும் தீபாவளியை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தங்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தாடைகள் பட்டாசுகள் மற்றும் பலகாரங்களை உற்சாகமுடன் வாங்கி செல்கின்றனர்.


பொதுமக்களை கவரும் வகையில் பல சாலையோர வியாபாரிகளும் கடை அமைத்துள்ளனர். இதற்கிடையில் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்பதால் முன்னெச்சரிக்கையாக நெல்லை மாநகர காவல்துறை சார்பில் மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான டவுண், வண்ணாரப்பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை போன்ற பகுதியில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ரத வீதிகளை சுற்றிலும் பொதுமக்களை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணித்து வருகின்றனர்.  இது தவிர ஊர்க்காவல் படையினரும், சீருடை அணியா காவலர்கள் என போலிசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். டவுண் மற்றும் வண்ணாரப்பேட்டையில் போலீசார் உயர் கோபுரம் அமைத்து கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர். குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். தீபாவளி பண்டிகையின் இறுதிகட்ட விற்பனை மாநகரம்  முழுவதும் சூடுபிடித்ததால், நெல்லை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.




இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவையில் காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து  நெல்லை மாநகர பகுதிகளான வண்ணாரப்பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தீவிரமாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர், குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது, மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ்குமார் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள், அதிக சத்தத்தில் வெடிக்கும் பொருட்கள் போன்றவை கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது, கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தீபாவளி பண்டிகை பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக உதவி ஆணையர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண