தென்காசி மாவட்டம் குற்றாலம் தென் தமிழகத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நாள்தோறும் குற்றால அருவிக்கு வருகை தந்து புனித நீராடி விட்டு சபரிமலை சென்று வருகின்றனர்.  மேலும் குற்றாலத்திற்கு வரும் ஐயப்பன் பக்தர்கள் குற்றாலம் பகுதியில் விற்பனை செய்யப்படும் சிப்ஸ், பேரிச்சம்பழம், அவல், பொரி உள்ளிட்ட பொருட்களை ஆவலுடன் வாங்கி செல்வது வழக்கம்.


இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பல உணவகங்கள்  அதிகமான அளவில் உணவுகளை பதப்படுத்தி விற்பனை செய்து வருவதாகவும், கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், சுகாதரமற்ற நிலையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட பொருட்களை பயன்படுத்துவதாகவும் உணவுப்பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன் குத்துக்கல் வலசை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வடை, முறுக்கு, கேக் உள்ளிட்ட 14 கிலோ காலாவதியான தின்பண்டங்கள் பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து பிரியாணி கடை ஒன்றில் 33 கிலோ பதப்படுத்தப்பட்ட மீன், சிக்கன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு உணவகங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் சாலையோரம் பதநீர் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரியிடம் சோதனை மேற்கொண்டதில் அதிகளவு சுண்ணாம்பு மற்றும் சாக்ரீன் போன்ற பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு 18 லிட்டர் பதநீர் கைப்பற்றப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. 




அந்த வகையில், தற்போது குற்றாலம் சன்னதி பஜார் முழுவதும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகளவு நிறுவப்பட்டு விற்பனையானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் ஒருசில கடைகளில் கெட்டுப் போன பலகாரங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்பன் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாக சுப்பிரமணியம் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, குற்றாலநாதர் ஆலயத்தின் வடபுறம் உள்ள சன்னதி பஜாரில் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பேரிச்சம் பழங்களை ஆய்வு செய்தபோது, அந்த பேரிச்சம் பழங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத அளவில் கெட்டுப்போன பேரிச்சம் பழங்களாக இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அதேபோல், சுமார் மூன்று கடைகளில் இது போன்ற ஆய்வை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மேற்கொண்டதில் சுமார் 1060 கிலோ எடையுள்ள கெட்டுப்போன பேரிச்சம் பழங்களை பறிமுதல் செய்து குற்றாலம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் கொட்டி அளித்தார்.


மேலும் குற்றாலத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான முறையில் உணவு பண்டங்களை வழங்க வேண்டும் எனவும் இது போன்ற காலாவாதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றார். குற்றாலத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், சுற்றுலாப் பணிகளுக்கு அந்த கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.