விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுரேந்திரராஜா என்பவருக்கு சொந்தமானது கவுஸ்துபா பருத்தி ஆலை. ஆலை வளாகத்திலேயே பருத்தி கிடங்கும் இணைந்து உள்ளது. இந்த நிறுவனம் தனது ஆலை மற்றும் பருத்தி கிடங்குக்கு ராஜபாளையத்தில் இயங்கி வரும் "தேசிய காப்பீடு நிறுவனம் ( National insurance co.ltd ) மூலம் "தீ மற்றும் சிறப்பு காப்பீட்டு கொள்கை" கீழ் காப்பீடு செய்திருந்தது. இந்த நிலையில் கடந்த 19.12.2018 அன்று பருத்தி கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து பருத்தி ஆலை நிறுவனம் சார்பாக நஷ்ட ஈடுக்கான காசோலை கேட்டதற்கு, காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை தாமதப்படுத்தி பின் அதனை நிராகரித்தது. அதற்கான காரணமாக கிடங்கின் இடம் காப்பீடு செய்யப்பட்ட பகுதியில் இல்லை என தெரிவித்தது. என்றாலும் முழு ஆலையும் ஒரே தபால் முகவரியுடன் தான் இருந்தது. பருத்திஆலை நிறுவனம் சார்பில், நெல்லை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
பருத்தி ஆலை தரப்பில் கூறும் போது காப்பீட்டு நிறுவனம் ஆலையின் அமைப்பை நன்கு அறிந்திருந்தது மற்றும் ஆலையின் முழுமையான வளாகத்திற்கும் காப்பீடு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கின்றனர். மேலும் காப்பீட்டு நிறுவனம் அநியாய வாணிப முறைகள் மற்றும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கான நஷ்ட ஈடு, மனவேதனை மற்றும் சட்டச் செலவுகள் உள்பட மொத்தம் ரூ. 9.91 கோடி வட்டியுடன் இணைந்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நுகர்வோர் நாணயம், 19.12.2018 அன்று தீ விபத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக ரூ. 9,50,63,985 /- ( 9 கோடியே, 50 லட்சத்தி, 63 ஆயிரத்து, 935 ரூபாய் ) தொகை 9 % வட்டியுடன், தீ விபத்து நிகழ்ந்த தேதி முதல் இந்த உத்தரவு வழங்கப்பட்ட 20.08.2024 வரை செலுத்த வேண்டும்.
மேலும் மன உளைச்சல் மற்றும் மன வேதனைக்காக ரூ.3 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்காக ரூபாய் 50,000யும் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நஷ்ட ஈடு தொகையை வட்டியுடன் மன உளைச்சலுக்கான நஷ்ட ஈட்டையும் வழக்குச் செலவு உத்தரவு நகலை பெற்று ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் செலுத்தப்பட வேண்டும். தவறினால் அதன் பிறகு காப்பீட்டு நிறுவனம் ஆண்டுக்கு 6.5 வட்டி செலுத்த வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் உரிய இழப்பீட்டுத் தொகையாக கோடிக்கணக்கான ரூபாயை அளிப்பதற்கான தீர்ப்பை அளித்தது மட்டுமின்றி மனுதாரரின் மன உளைச்சலுக்கும், வழக்கு செலவிற்கும் சேர்த்து நஷ்டஈட்டை காப்பீட்டு நிறுவனம் தர கூறி இருப்பது நுகர்வோர்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.