தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய போது, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி எழுந்து, மதுபான திருத்த விதிகளை கண்டித்தும், தொழிலாளர் வேலை சட்டத்தை திருத்தம், முத்திரை தாள் கட்டண உயர்வை கண்டிப்பதாகவும் கூறி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கூட்ட அரங்கில் முன்பு வந்து கோஷம் எழுப்பினார். உடனடியாக மேயர் அவரை வெளியேற்றுமாறு கூறினார். அப்போது முன் வரிசையில் இருந்த தி.மு.க கவுன்சிலர்கள் மந்திர மூர்த்தியை சூழ்ந்து கொண்டு கூட்ட அரங்கில் இருந்து வெளியில் அனுப்பி விட்டனர். அப்போது அங்கு பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், பத்மாவதி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கூட்டத்தில் 11 தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்டன.





கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பேசும் போது, தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகரில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டும். அந்த பகுதியில் கூடுதல் நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மணிநகர் பகுதியில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்யாநகர் பகுதியில் தெருகுழாயில் டியூப் போட்டு குடிநீர் பிடிப்பதால் சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினர்.


கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது, மாநகராட்சி பகுதியில் கோடைகாலத்திலும் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் புகார்கள் உள்ளன. அதனை ஆணையாளர் சரி செய்து வருகிறார். மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி இயங்கிய இரண்டு குடிநீர் நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சி பகுதிக்குள் எந்த இடத்திலும் குடிநீர் உறிஞ்சி எடுக்க அனுமதி கிடையாது. மாநகராட்சி பகுதிக்குள் மினரல் வாட்டர் நிறுவனம் அமைக்க அனுமதி இல்லை. அவ்வாறு செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சாலை பணிகளும் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ரூ.24 கோடி செலவில் சாலைகள் அமைப்பதற்கும் முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். தூத்துக்குடி நகரை தூய்மையான நகரமாகவும், மாசில்லா நகரமாகவும் மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் சாலைகளை தேர்வு செய்து செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக கோவில்கள், பள்ளி மாணவர்கள் செல்லும் சாலைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி நோக்கத்தின்படி கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது.






தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளிக்கூடத்தை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று பாண்டுரங்கன் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தை அறிஞர் அண்ணா மண்டபம் அருகில் இடமாற்றம் செய்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பள்ளிக்கூடம் முழுமையாக மாணவிகள் மட்டும் படிக்கும் வகையில் பெண்கள் பள்ளிக்கூடமாக மாற்றப்பட உள்ளது என்றார். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.