தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்படி சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிகாலை பன்னம்பாறை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.




அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் சாத்தான்குளம் கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் கொடிமலர் (40) என்பதும் அவரிடம் ஸ்குரு டிரைவர், கட்டிங்பிளேயர் வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகளிலும், நாசரேத் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளிலும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளிலும் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கிலும், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குளிலும் சம்பந்தப்பட்டவர் தெரியவந்தது. உடனயடியாக அவரை கைது செய்து அவரிடமிருந்த 126 பவுன் எடையுள்ள தங்க நகைகள், திருட்டு பணத்தில் வாங்கிய யமகா ரே ஸ்கூட்டர், கலர் டிவி என மொத்தம் ரூபாய் 48,42,000 மதிப்புள்ள சொத்துகளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.




இந்நிலையில் கொள்ளையில் ஈடுப்பட்ட கொடிமலர் குறித்து பல பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்தவர் கொடிமலர். இவரது மனைவி பிரேமா. இவர் கட்டாரிமங்கலத்தில் 7வது வார்டு மெம்பராக உள்ளார். கொடிமலர் தான் வெளியூரில் சுவீட் கடை நடத்தி வருவதாக பார்ப்பவர்களிடமும், உறவினர்களிடமும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பெண் பார்க்கும் புரோக்கர் வேலையும் செய்து வந்துள்ளார்.




இந்த நிலையில் கிராமப்புறங்களுக்கு பெண் பார்க்க செல்வது போல் சென்று அங்கு ஒவ்வொரு பெண் வீடுகளுக்கும் சென்று அங்கு பெண்ணுக்கு என்ன சேர்த்து வைத்துள்ளீர்கள், மாப்பிள்ளை வீட்டில் கேட்டால் சொல்ல வேண்டும் என கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர் அந்த வீடுகளில் வீட்டின் உரிமையாளர் வெளியே சென்றால் சாவியை வைக்கும் இடங்களையும் நோட்டமிட்டு இந்த சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 


குறிப்பாக இவர் எங்கு சென்றாலும் தனது வாகனத்தில் ஸ்குரு டிரைவர், கட்டிங்பிளேயர் கொண்டு சென்றுள்ளார். எனவே கிராமபுறங்களில் உள்ள வீடுகளை இந்த பொருட்கள் மூலம் எளிதாக திறந்து நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதே போல் 6 மாதத்திற்கு ஒருமுறை பேய்க்குளம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளின் தனது வீட்டையும் மாற்றியுள்ளார். தற்போது அவர் பேய்குளம் அருகே உள்ள பனைகுளத்தில் குடியிருந்து வந்துள்ளார். பேய்குளம் பகுதியில் கடந்த மாதம் ஒரு திருட்டு நடந்துள்ளது. அந்த திருட்டு நடந்த பகுதியில் இவர் புதிதாக எடுத்த இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதை அடிப்படையாக வைத்து தான் இவரை போலீசார் கைது செய்துள்ளனர். 




இந்த நிலையில் தான் கடந்த ஒரு மாதம் முன்பாக தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை பேய்க்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடத்தியுள்ளார். மேலும் இந்த விழாவிற்காக அச்சிடப்பட்ட வரவேற்பு கடிதம் மற்றும் பிளக்ஸ் பேனர்களில் புகைப்படத்தை வைப்பதற்காக அவர் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அதில் கழுத்தில் திருடப்பட்ட செயினும், கையில் 10 விரல்களிலும் திருடப்பட்ட 10 மோதிரங்கள் அணிந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் தனது மனைவியின் கழுத்திலும் அதிக அளவில் திருடப்பட்ட நகைகளை அணிந்து புகைப்படத்திற்கு இருவரும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவின் போது மேடையில் தனது மகளுக்கு திருடப்பட்ட நகைகளை மாற்றி புதிதாக 25 பவுனில் நீண்ட செயினை பரிசாக அளித்துள்ளார் கொடிமலர். 




இந்த விழாவிற்கு அடிக்கப்பட்ட வரவேற்பு பத்திரிக்கையில் அமைச்சர் உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்களின் படத்தையும் அச்சிட்டு மிக பிரமாண்டமாக இந்த விழாவை நடத்தியுள்ளார்.சாத்தான்குளம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்து வந்த சூழலில் வித்தியாசமான முறையில் திருடி தனி ஒருவனாக திருடி ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார் கொடிமலர்.