மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக புகார் - கோவில்பட்டி அருகே பள்ளியை மூடி மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம்.




தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. கழிவறை மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணியில் மாணவ மாணவிகளை ஈடுப்படுத்துவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.




இந்த சூழ்நிலையில், இங்கு பயிலும் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும், ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த மாணவர்களை தண்ணீர் எடுத்து வர சொல்வதாகவும், மேலும் மாணவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டி வருவதாகவும், பாடம் நடத்தாமல் ஆசிரியர்கள் செல்போனில் கேம் விளையாடி வருவதாகவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆசிரியர்களை பள்ளிக்குள் விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சுசிலா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சின்னராசு, வட்டார கல்வி அலுவலர் பத்மாவதி அங்கு வந்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்,ஆசிரியர்கள் கழிவறைக்கு செல்லும் முன் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் வைக்க சொல்வார்கள் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வார்கள் என மாணவர்கள் தெரிவித்தனர்.




இந்த பள்ளியின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.தலைமை ஆசிரியை நிலா ஜெயலட்சுமி இடமாற்றம் செய்ய வேண்டும் அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பினர்.


இதுதொடர்பாக வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியைகளிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, இப்பள்ளியில் தூய்மை பணியாளர்கள் இல்லை என பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றனர்