இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை யடுத்து கொரோனாவை கட்டுபடுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலும் கொரோனா சோதனை தினமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தினசரி பூஜ்ஜியத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

 



 

தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது. நேற்று ஒரே நாளில் கன்னியாகுமரி அரசு மருத்துக்கல்லூரி இல் 900 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் பாதிப்பு யாருக்கும் இல்லை. மேலும் தனியார் மையங்களிலும் 200க்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டதில் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்கள் பொது மக்கள் கூடும் இடங்களில் பொது மக்கள் முக கவசம் இன்றி சுற்றி திரிகிறார்கள். தற்பொழுது பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து முககவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


 

பொது மக்கள் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு அலுவலர்கள் பணிக்கு வரும்போது முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். குமரி மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டு மென்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.