திருநெல்வேலி அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று திரும்புகையில், திமுக பிரமுகரின் குழந்தைக்கு, தனது மகள் பெயரை சூட்டி மகிழ்ந்தார்.
திருநெல்வேலி அரசு விழா:
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது 75,151 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தார்.
நெல்லைமாவட்டத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடுத்து நடைபெற உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டங்களையும் அறிவித்தேன். அடுத்த ஐந்தாண்டுகளில் தென் மாவட்டங்களின் தொழில்வளர்ச்சி புலிப்பாய்ச்சலாக அமையும் என பெருமிதத்தோடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர்:
இதையடுத்து, திருநெல்வேலியில் இருந்து சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, நெல்லை மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த திமுக பேரூராட்சித் தலைவர் முருகையா பாண்டியன் மற்றும் சிதம்பரவடிவு தம்பதி முதலமைச்சரை சந்தித்து, தங்களது பெண் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக, அந்த பெண் குழந்தைக்கு செந்தாமரை என்ற பெயரை மகிழ்ச்சியுடன் சூட்டினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகளின் பெயரும் செந்தாமரை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை குறித்து முதலமைச்சர் பெருமிதம்:
நெல்லை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “திக்கெட்டும் புகழ் பரப்பிய நெல்லைச் சீமையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பாண்டியர் ஆட்சியாக இருந்தாலும், சோழர் ஆட்சியாக இருந்தாலும், விஜயநகர ஆட்சியாக இருந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும், அதில் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊர், நம்முடைய திருநெல்வேலி'
இந்தியாவே அடிமைப்பட்டு நெளிந்துக்கொண்டு இருந்த போது ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி பூபாளம்' பாடிய மாவீரன் பூலித்தேவன் பிறந்த மண். இந்த நெல்லை ஓராண்டு. ஈராண்டு அல்ல, 17 ஆண்டுகள் வெள்ளையருக்கு எதிராக படை நடத்திய பாளையக்காரர்தான் பூலித்தேவன்! அந்தப் பூலித்தேவனுக்கு நெல்கட்டும் செவல்'-இல் நினைவு மண்டபம் அமைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்.
நெல்லையின் அடையாளங்களில் முக்கியமானது, ஏழாம் நூற்றாண்டில், "நின்றசீர் நெடுமாறப் பாண்டியரால்" கட்டப்பட்ட நெல்லையப்பர் கோயில். இப்படி பாரம்பரியம் மிக்க கோயிலை 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து, திருப்பணிகள் செய்தவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர்
அதேபோல. நம்முடைய ஆட்சியில் தான் நெல்லையப்பர் கோயிலில் பூட்டிக்கிடந்த மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டது. அதேபோல, வரும் நவம்பருக்குள் கோயிலின் வெள்ளித்தேர் ஓடும்.
தலைநகர் சென்னை மையப்பகுதியில், அண்ணா மேம்பாலம் அமைத்தது போன்று. நெல்லையில் 1973-ஆம் ஆண்டு ஈரடுக்குப் பாலம் அமைத்து, அதற்கு திருவள்ளுவர் பாலம் என்று பெயர் சூட்டியவர் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்! செல்லப்பாண்டியன் பெயரிலான பாலமும் கழக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது.