தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் காணும் பொங்கலை சுற்றுவட்டார பகுதி மக்கள் கொண்டாடும் விதமாக தூய்மைபணியினை மேற்கொள்ள வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டாத்தில் ஈடுபடபோவதாக வியாபாரிகள் சங்கத்தினரும் பொது மக்களும் தெரிவித்ததை தொடர்ந்து மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளுடன் வனத்துறையினர் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆற்றை தூய்மை படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அனைத்து கீழ் பகுதியில மணல் பகுதியாக இருந்த இடத்தில் ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் காணும் பொங்கல் திருநாள் அன்று சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்தோடு வந்து விளையாடி மகிழ்வார்கள்.காலப்போக்கில் மணல் பகுதிகளில் முட்செடிகள் அதிகரித்து காணும் பொங்கல் அன்று குடும்பத்தோடு தாமிரபரணி ஆற்றில் விளையாடி மகிழ்வது மறைந்து போனது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை முயற்சியால் ஶ்ரீவைகுண்டத்தில் உள்ள இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால் காணும் பொங்கல் சித்திரை திருவிழா என பொதுமக்கள் மீண்டும் கொண்டாடி மகிழ்ந்தனர்.தொடர்ந்து உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் முட்செடிகள் அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கலை கொண்டாடும் பழக்கம் நின்று போனது.இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியை சீர்படுத்தி பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் ஶ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோர் தங்களது சொந்த நிதியில் தாமிரபரணி ஆற்றின் இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியை சீர்படுத்த முன்வந்தனர்.இதற்கான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. அப்போது தாமிரபரணி ஆற்றில் வனத்துறை பகுதியில் பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற வேண்டும் எனக் கூறி வனத்துறையினர் தடை விதித்தனர்.
சட்டமன்ற உறுப்பினரின் நிதி உதவியுடன் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணிக்காக தாசில்தாரிடம் முன் அனுமதி பெற்று பணி தொடங்கப்பட்டுள்ளதாக பொதுமக்களும் வியாபாரிகள் சங்கத்தினரும் தெரிவித்தனர்.மாவட்ட வன அலுவலரின் உரிய அனுமதியின்றி பணி மேற்கொள்ளக் கூடாது என வனவர் பழனி மற்றும் வனக் காப்பாளர் கோபிநாத் ஆகியோர் தெரிவித்தனர்.
தாமிரபரணி ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்த காணும் பொங்கல் உரிய பராமரிப்பு இல்லாததால் நின்று போனது.இந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கல் கொண்டாட பொதுமக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதற்கு வனத்துறையினர் தடை விதித்தால் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வியாபாரிகள் சங்கத்தினரும் பொது மக்களும் தெரிவித்தனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
இதற்கிடையில், இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தூய்மை பணியில் ஈடுபடும் போது மரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது புதிதாக பாதை அமைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தூய்மைப் பணியை மேற்கொள்ள மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் அனுமதி அளித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்ததை எடுத்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.