இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவனின் 307வது பிறந்த  நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவலில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகள் காலை முதல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி தமிழக அரசு சார்பில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் கூறும் பொழுது, இந்திய விடுதலை போராட்டத்தின் முதற்கட்ட போராட்டத்தை இந்திய திருநாட்டின் தென்பகுதியில் ஆரம்பித்த பிறருக்கு அடிபணியாத, இந்திய சுதந்திரத்தின் முதல் போராட்டக்கள வீரர் பூலித்தேவன் வசித்த மண்ணுக்கு வந்திருப்பதற்கு மிகுந்த பெருமையடைகிறோம். முதல்வர் சார்பில் மரியாதை செலுத்தி உள்ளோம். பூலித்தேவன் சிலையை அமைத்து மணிமண்டபத்தை அமைத்தது திமுக தலைவர் கருணாநிதி தான். இதே போல் தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை வழங்கியவர் தலைவர் கருணாநிதி என்று தெரிவித்தார்.





தொடர்ந்து பூலித்தேவன் திருவுருவுச்சிலைக்கு மதுரை ஆதீனம் சீடஸ்ரீ ஞான சம்பந்த தேசிகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறும் பொழுது, நெல்லை மாவட்டம் வீரர்கள் விளைந்த மாவட்டம், வெள்ளையனுக்கு சாவு மணி அடித்தவர்களில் முதல் வீரர் பூலித்தேவன். அடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி என நிறைய பேர் தோன்றி வெள்ளை ஏகாதியபத்தியத்தை எதிர்த்துள்ளனர். சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு பூலித்தேவன் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அவருக்கும் சங்கரன்கோவிலில் சிலை அமைக்க வேண்டும், அவரது வம்சத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும், இதனை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும், பூலித்தேவனுக்கு தபால் தலையை மத்திய அரசு வெளியிட வேண்டும். தேசப்பக்தி மக்களிடையே குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்க பூலித்தேவன் வாழ்க்கை வரலாற்றை பாட புத்தகத்தில் இணைக்க வேண்டும்.  என மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


 




அதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய அவர் கூறும் பொழுது,2047 இல் இந்த நாடு எப்படி ஒரு வளர்ச்சியடைந்த நாடாக  இருக்க வேண்டும் என்பது வருகிற 25 ஆண்டுகள் இளைஞர்களின் ஆண்டுகளாக இருக்கிறது. 100 வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் நம்முடைய சுதந்திரத்திற்காக பாடுபட்ட குறிப்பாக தென் தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் கொடுத்தவர்கள் அப்போதைய தென் தமிழக மன்னர்கள்.  முதல் சுதந்திரத்திற்கு வித்திட்ட மாமன்னர்கள் வரிசையில் பூலித்தேவனின் பிறந்த நாளை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.


 




தூர்தர்ஷனில் சுராஜ் என்கிற நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் உள்ள அறியப்படாத 75 சுதந்திரப் போராட்ட வீரர்களின், தியாகிகளின் வரலாற்றை ஒளிபரப்பப்படவுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மாமன்னர் பூலித்தேவன்  ஆகிய மூன்று சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறும் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ், ஆங்கிலம் இந்தி உள்ளிட்ட 8 மொழிகளில்  75 வாரங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு ஒளிபரப்பாக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி தமிழில் ட்விட் வெளியிட்டு பூலித்தேவனை நினைவு கூறியிருக்கிறார். மேலும் சுந்தரப் போராட்ட வீரர் பூலித்தேவர் தபால் தலை வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.




 


மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆன ஓ பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டம் செவலில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வருகை தந்தார். சங்கரன்கோவில் பகுதியில் அவருக்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் திறந்த வேனில் நின்றபடி வரவேற்பு ஏற்றுக் கொண்ட அவர்  நெற்கட்டும் மாளிகைக்கு வந்தடைந்தார். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும்  மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். மாமன்னர் பூலித்தேவன் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாளிகையில் உள்ள நூலகத்திற்கு சென்று அங்குள்ள புத்தகத்தில் தனது வருகையை பதிவு செய்தார். ஓபிஎஸ்ஐ வரவேற்க தொண்டர்கள், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அங்கு  கூடியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்