இந்திய கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து அவைகளை தீர்க்கும் வகையிலும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடலோர யாத்திரை மத்திய அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் தொடங்கிய யாத்திரை தூத்துக்குடி மாவட்டத்தை வந்தடைந்தது. இந்த யாத்திரை குழுவில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீபர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வந்த குழுவினர் வீரபாண்டியன் பட்டினம் கடற்கரை கிராமத்தில் மீனவ மக்களை சந்தித்து உரையாடினர். மீனவர்கள் பல்வேறு குறைகளை அவர்களிடம் தெரிவித்தனர். தூண்டில் வளைவு, ஐஸ் உற்பத்தி ஆலை, மீன் ஏல கூடம், வலைப்பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அளித்தனர். மீனவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் உறுதியளித்தனர்.




முன்னதாக மத்திய அமைச்சர்கள் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது இணையமைச்சர் முருகன் கூறும்போது: மீன்வளத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சகத்தை பிரதமர் மோடி புதிதாக அமைத்து கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீபர்ஷோத்தம் ரூபாலா ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடலோர யாத்திரையை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். கடற்கரை மக்கள் மீனவர்களை சந்தித்து மீன்வளம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவது சொடர்பாக அவர்களது ஆலோசனைகளை பெறும் நோக்கத்தில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்ட யாத்திரை மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மாநிலம் வழியாக நேற்று தமிழகத்துக்கு வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை முடித்துவிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வந்துள்ளோம். அடுத்ததாக ஆந்திரா, மேற்கு வங்கம் வழியாக வங்கதேச எல்லையில் நிறைவடையும்.




மீன்வளத்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை இந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.3500 கோடி தான். கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் இந்த துறைக்கு ரூ.38,500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி ஒதுக்கியுள்ளார். இதனால் கடந்த 9 ஆண்டுகளில் மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மீன் ஏற்றுமதியில் உலகில் 4-வது இடத்திலும், இறால் ஏற்றுமதியில் 2-வது இடத்திலும் நாம் இருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்று கொண்டிருக்கின்றன. அவைகளை இன்னும் விரிவுபடுத்தும் வகையில் மக்களை சந்தித்து அவர்களது குறைகள், ஆலோசனைகளை கேட்டறிந்து வருகிறோம்.






அவசர காலங்களில் மீனவர்களுக்கு உதவுவதற்கு கடல் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக குமரி மாவட்ட மீனவர்கள் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பாக பரிசீலனை செய்து மீனவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் மீன்பிடி படகுகளுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளோம். அதுபோல மீன்பிடித் துறைமுகம், மீன் இறங்குதளங்களை மேம்படுத்த ரூ.1800 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம்.




இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்பாசிக்கான சிறப்பு பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.127 கோடி மதிப்பீட்டிலான இந்த பூங்காவுக்கு அமைச்சர் ஸ்ரீபர்ஷோத்தம் ரூபாலா அடிக்கல் நாட்டுகிறார். அதுபோல ரூ.60 லட்சம் மானியத்துடன் தலா ரூ.1.30 கோடி மதிப்பிலான 50 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் மத்திய அரசு சார்பில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.




கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை அதனை தாரைவார்த்து திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விசயத்தில் மத்திய அரசு கலந்தாலோசித்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கும். கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் மீன்வளம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணித்த சூழ்நிலையிலும், மீனவர்களின் நலனுக்காக இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.




கடந்த 2014 வரை தமிழக மீனவர்கள் மீது தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏராளமான மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், 2014-க்கு பிறகு ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் கூட நடைபெறவில்லை. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ராஜாங்க நடவடிக்கைகளே காரணம். மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். சில நேரங்களில் அந்த பகுதிக்கு போகும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தடுப்பதற்கு தான் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்து வருகிறோம். மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருப்பதற்காக ஜிபிஎஸ் கருவிகளை கொடுத்துள்ளோம். மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம், அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து வருகிறோம். மீன்வளத்தை பெருக்க மீன் குஞ்சுகளை கடலில் விடும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம் என்றார்.




தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடினர். இதில் கலந்து கொண்ட மீனவர்கள், மீனவர்கள் தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும், மீன்பிடி தடைக்காலத்தின் போது கேரள விசைப்படகுகள் தமிழக கடற்கரைக்கு வராமல் தடுக்க வேண்டும், மீன்பிடி தடைக்காலத்தை நவம்பர், டிசம்பர் மாதத்துக்கு மாற்ற வேண்டும். ஆழ்கடல் மீன்படித்தலுக்கான படகுகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். கடல் ஆம்புலன்சு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.