கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சி பகுதியில் நர்சரி கார்டனுக்குள் புகுந்த கும்பல் கார்டன் உரிமையாளரை தாக்கியது தொடர்பாக தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் குறித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் தக்கலை அடுத்த புலியூர்குறிச்சி பகுதியில் நர்சரி கார்டன் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜூன் 26-ம் தேதி இரவு கார்டனில் உள்ள அலுவலக அறையில் ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது பொலேரோ காரில் வந்திறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் கார்டனுக்குள் புகுந்து அலுவலகத்தில் இருந்த தர்மராஜை இழுத்து அவர் மீது சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் நிலை தடுமாறி அலுவலக அறையில் விழுந்த தர்மராஜை மீண்டும் உள்ளே புகுந்து தாக்கிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதில் காயமடைந்த தர்மராஜ் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் புகாரின் பேரில் கார்டனில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி கும்பல் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மராஜ் நடத்தி வரும் நர்சரி கார்டன் 20 ஆண்டுகளுக்கு லீஸ் அடிப்படையில் வேறு நபரிடமிருந்து பெற்று நடத்தி வருகிறார். இதில் தர்மராஜூக்கும் நிலத்தின் உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக முன்விரோதம் இருந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் ரவுடிகளை அனுப்பி வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த கார்டனுக்குள் புகுந்து ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்