கடந்த 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும் செல்வப்பெருந்தகை நெல்லையிலிருந்து நான்கு வழிச்சாலையில் தென்காசி நோக்கி காரில் வரும்பொழுது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள ராமச்சந்திரபட்டணம் எனும் பகுதி வரை காரில் வந்து விட்டு பின்பு தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த பைக் பேரணியில் ஈடுபட்டார். அப்பொழுது செல்வப்பெருந்தகை மற்றும் அவருடன் பைக் பேரணியில் ஈடுபட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஹெல்மெட் எதுவும் அணியாமல் பைக் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரே செயல்பட்டார் என கூறி தமிழக பாஜகவில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளராக இருந்து வரும் எம்.சி. மருதுபாண்டியன் என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் செல்வப்பெருந்தகையின் மீது தற்போது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 23.07.24 அன்று பாவூர்சத்திரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ராமச்சந்திரபட்டணத்தில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அரசின் சட்டங்களுக்கு எதிராக மோட்டார் சைக்கிளில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் வாகன பேரணி சென்றது கண்டனத்திற்குரியது.
மக்களுக்கு முன் உதாரணமாக இருக்கக்கூடிய தேசிய கட்சியின் மாநில தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாதது. மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 129 ன் படி சாலையில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், ஆகையால் செல்வப்பெருந்தகை மற்றும் அவருடன் மோட்டார் வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாஜக சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் சட்டம் என்பது சாமானியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சமமானது என்பதை காவல்துறை நிச்சயம் நிலைநாட்டும் என்பதை நம்புகிறேன் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் மீது பாஜக சார்பில் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது