கொடுமுடியாறில் தண்ணீர் திறப்பு:


நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்  52.25 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை உள்ளது. தற்போது இந்த அணையில் நீர் இருப்பு 51 அடியாக உள்ளது. இந்த அணையின் மூலம் நாங்குநேரி, இராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகிவற்றின் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் இந்த அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி இன்று 1- ந்தே ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார். 


பயனடையும் குளங்களும்,கிராமங்களும்:


இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, முதல்வர் உத்தரவுப்படி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள  வள்ளியூரான் கால், படலையார்கால், ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் 2548.94 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இன்று 01-07-24 முதல் 28-10-2024 வரை 120 நாட்களுக்கு 50 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். மேலும் மழையை தொடர்ந்து அணைக்கு தண்ணீர்  வரத்து அதிகரித்தால் வடமலையான் கல்வாயிலும் 100 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 3231.97 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.  குறிப்பாக திறந்துவிடப்பட்ட தண்ணீரால் 8 குளங்கள் ஓரளவிற்கு பெருகி வருகின்றன. இந்த குளங்கள் ஓரளவிற்கு நிரம்பி விட்டாலே மீதி இருக்கும் 36 குளங்களுக்கும் பெருக தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் நாங்குநேரி தாலுகாவில் 6 கிராமங்களும், இராதாபுரம் தாலுகாவில் 10 கிராமங்களும் முழுமையாக பயனடையும் என்றார்.


மீனவர்களை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு:


தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் 4 நாட்டு படகில் சென்ற பாம்பனை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். இந்தியா என்பது வழுவான கட்டமைப்பு உள்ள ஒரு நாடு. சாதாரண மீனவர்கள் கூட இலங்கை போன்ற சிறிய நாடுகள் வேண்டுமென்றே அத்துமீறி நமது மீனவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது மட்டுமல்ல, கடந்த காலங்களில் மோடி பிரதமராவதற்கு முன்னாள் வரை இது போன்ற சம்பவங்கள் நடந்தாலும் கைது செய்துவிட்டு படகுகளை உடனடியாக அவர்கள் விடுவித்து விடுகிறார்கள்.  பல லட்சம் அளவிலான படகுகள் அங்கேயே போட்டு அனைத்து பழுதாகி சேதமடைகிறது. இந்த அளவிற்கு இடையூறு செய்தும் ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர், வெளியுறவுத்துறை அமைச்சர்  வலியுறுத்தி வந்தாலும் அதற்கு என்னவென்று கூட பரிசீலிப்பதும் இல்லை, பதில் சொல்வதும் இல்லை.  10 ஆண்டுகாலமாக என்ன நிலைப்பாடோ அதே தான் 11 வது ஆண்டிலேயும் தொடர்ந்து மீனவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை கண்டுக்கொள்ளாமல் உள்ளது. அரசு மீனவர்கள், வெளியுறவுத்துறை, தமிழக அரசு,  நீர்வளம், மீன்வளத்துறை இலங்கை அரசின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.  கண்டிப்பாக ஒன்றிய அரசும் தலையிட்டால் தான் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்றார்.