போக்குவரத்து சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூத்துக்குடி காவலருக்கு குவியும் பாராட்டுகள்.




தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலின் நிற்கும் சில வினாடிகளில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த  போக்குவரத்து காவலர் ஒருவர். அவரது செயலை அனைவரும் வியப்போடு பார்த்துச் செல்கின்றனர். போக்குவரத்து காவலர்கள் என்றாலே   வாகனத்தை மறித்து அபராதம் விதிப்பார்கள் என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால், அந்த கருத்தை முற்றிலும் மாற்றும் விதமாக , போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் போக்குவரத்து காவலர் கணேசன்.




தூத்துக்குடி விவிடி சிக்னல் உள்ளிட்ட பல சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கவனித்துக் கொள்வதோடு,  ஒலிபெருக்கி மூலம்  தான் பணியில் இருக்கும் நேரத்தில் தொடர்ந்து அவர் விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்துக் வருகிறார். தூத்துக்குடியை விபத்தில்லா நகரமாக மாற்றும் நோக்கத்தில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போக்குவரத்து காவலர் கனேசன் போக்குவரத்து விதிமுறைகள், ஹெல்மட் போடுவதன் அவசியம், உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தி வருகிறார்.




தங்களது அன்றாட பணிகளை நோக்கி வேகமாக நகர்ந்து செல்லும் மக்கள் போக்குவரத்து காவலரின் விழிப்புனர்வு வாசகங்களையும் தங்களது செவிகள் மூலம் கேட்டு அவரின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டுகளை தெரிவித்து செல்கின்றனர்.ஆண்ட்ராய்டு செல்போணுக்கு கவர் எவ்வளவு முக்கியமோ அதேபோல்  இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் முக்கியம் என்பது காவலர் கணேசனின் விழிப்புணர்வு வாசகம் ஆகும். அதேபோல, சிக்னலில் எவ்வாறு செல்ல வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவது, லோடு ஆட்டோவில் பொதுமக்களை ஏன் ஏற்றக்கூடாது உள்ளிட்ட முக்கியமான கருத்துகளை காவலர் கணேசன் தொடர்ந்து கூறி வருகிறார்.




இதுகுறித்து காவலர் கணேசன் கூறுகையில், “சமீப காலமாக சாலை விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.தூத்துக்குடி மாநகரத்தை விபத்தில்லா மாநகர‌மாக மாற்றிட என்னால் முயன்ற ஒரு சிறு முயற்சியை செய்து வருகின்றேன். இவ்வாறு செய்வதன் மூலம் ஆயிரத்தில் ஒருவராவது போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன். பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து நடந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க வேண்டும்” என காவலர் கணேசன் என்கிறார்.