அதிமுவின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி.யான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், சசிகலா பக்கம் இருந்தவர், பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். ஆனாலும், அதிமுகவில் இருந்தபோது வரை, கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சிக்கவும் இவர் தயங்கியதில்லை. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறிய மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர்.




கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முதலே அன்வர் ராஜா, அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து விமர்சித்து வந்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அன்வர் ராஜா மீது அதிருப்தியில் இருந்தனர். அண்மையில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அன்வர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்., இருவரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால், கடந்த நவம்பர் 1ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டிருந்தது.


அந்த அறிக்கையில்,”கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.அன்வர்ராஜா, இன்று (நவ.1) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” என,  ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.




இதனை தொடர்ந்து, அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு பிறகு அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்துவந்தது.  இந்நிலையில், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டதால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், அதிமுக நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 34ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.



இந்த நிலையில், எம்ஜிஆரின் விசுவாசியும்  முன்னாள் அமைச்சரும் முன்னாள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி  உருக்கமான  வாசகங்களுடன் போஸ்டர்  ஒட்டி இருப்பது கட்சியினரிடையே  அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் வேளையில், எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான அவர், தற்போதைய அதிமுக தலைமையான இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரால் அதிமுக விலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதை மறைமுகமாக சாடியிருப்பதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.