போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து குறை தீர்க்கும் கூட்டத்தில் கோட்டாட்சியருடன் , விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, போதையை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் டாஸ்மாக்கினை மூட வேண்டும் , நீங்களே மக்களுக்கு போதையை கொடுத்து விட்டு எப்படி ஒழிக்க முடியும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார், எட்டயபுரம் என 5 தாலூகா பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதால் விவசாயிகள் தரையில் அமர்ந்தனர். மேலும் கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடங்கவில்லை என்பதால் விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கோட்டாட்சியர் மகாலட்சுமி வேறு ஒரு நிகழ்ச்சியில் இருப்பதால் வேளாண் அதிகாரிகள் வைத்து கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் விவசாயிகள் இதனை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 




இதையடுத்து சிறிது நேரம் கழித்து கோட்டாட்சியர் மகாலட்சுமி கூட்டத்திற்கு வந்தார். போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்றதால் கூட்டத்திற்கு வர தாமதம் ஏற்பட்டதாகவும் அதற்கு விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதி மொழி எடுத்த பின்னர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கப்படும் என்று கோட்டாட்சியர் அறிவித்தார். ஆனால் இதற்கு விவசாயிகள் தெரிப்பு தெரிவித்தனர்.




ஏற்கனவே கூட்டம் தொடங்க நேரமாகிவிட்டது. சரியான ஏற்பாடும் செய்யவில்லை, எனவே முதலில் கூட்டத்தினை தொடங்க வேண்டும் என்றும், போதையை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் டாஸ்மாக்கினை மூட வேண்டும், நீங்களே மக்களுக்கு போதையை கொடுத்து விட்டு எப்படி ஒழிக்க முடியும் என்று கூறி கோட்டாட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, உறுதி மொழி பேப்பரை உள்ளே வையுங்கள், இல்லை கிழித்து எறிந்து விடுவவோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி வாசிக்கமால் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பயிர்காப்பீடு தொகை எவ்வித பாரபட்சம் இல்லமால் அனைவருக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.