தமிழகத்தில் எத்தனையோ கிராமங்கள் இன்றும் வெளிஉலகிற்கு தெரியாத வகையில் தங்களது கிராமத்தின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் தங்களது கிராமத்திலுள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் வழியில் கல்விப்பணிக்காக பயணித்து வருவது பலரையும் ஆச்சரியத்திற்கும் ஆளாக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் தான் நாம் அடையாளப்படுத்தும் கிராமம் அமைந்துள்ளது. தூத்துக்குடி திருநெல்வேலி நான்குவழிச்சாலையில் அமைந்துள்ளது அந்தோணியார்புரம் கிராமம். அந்தோணியார்புரம் கிராமம் தங்கள் ஊர் பள்ளிக் குழந்தைகளின் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் என கிராம கல்வி வளர்ச்சிக்காக பதநீர் விற்பனை செய்வதை இந்த ஆண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இயற்கையாகவே பனைமரங்கள் மிகுந்துள்ள அந்தோணியார்புரம் கிராம மக்கள் காலம் காலமாக பனை ஏறும் தொழிலை பாரம்பரியம் குறையாமல் மேற்கொண்டு வருகின்றனர். காலத்தின் மாற்றத்தில் தற்போது பனை ஏறுபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு குறைந்து விட்டது.
முந்தையகாலங்களில் கிராமமக்கள் பதநீரை காய்ச்சி, கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்து வந்தனர். இதில் போதிய அளவில் வருமானம் கிடைக்காததால் தற்போது பதநீராகவே விற்பனை செய்து வருகின்றனர். நல்ல சுவையுடன் சுத்தமாகவும், தரமாகவும் இருக்கும் இந்த பதநீருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.அந்தோணியார்புரத்திலுள்ள பனைத்தொழிலாளர்கள் தனித்தனியாக பதநீர் விற்பனை செய்வதில் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், கிராமமக்களே ஒற்றிணைந்து பதநீர் விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது இங்குள்ள அனைத்து பனைத்தொழிலாளர்களிடமும் பதநீரை வாங்கி, அதனை தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையை ஒட்டி கிராமத்தின் நுழைவு வாயிலில் கல்வி வளர்ச்சி நிதிக்காக ஊர்மக்களால் நடத்தப்படும் பதனீர் விற்பனை நிலையம் அமைத்து அதன்மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அந்தோணியார்புரம் கிராமமக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பதநீர் விற்பனை மையத்தில் கிடைக்கும் லாபம் முழுவதும் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காக செலவு செய்யப்படுவது தான் ஹைலைட்டான சேதியாகும். அந்தோணியார்புரத்தில் அரசு உதவி பெறும் ஆர்.சி. தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கிராமமக்களின் கோரிக்கையை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு அரசு அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.
கடந்த 15 ஆண்டுகளாக அரசுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களின் ஊதியம், மாணவ, மாணவியர்களுக்கான பாடப்புத்தகம், நோட்டுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அந்தோணியார்புரம் கிராம கமிட்டியே ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் பதநீர் விற்பனை மையத்தில் கிடைக்கும் லாபத்தை கொண்டு இதற்கான செலவு சரி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அந்தோணியார்புரம் அந்தோணி விசுவாசம் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஊர் கமிட்டியினர் ஒன்றுகூடி பதநீர் விற்பனை செய்வது குறித்து முடிவு செய்வார்கள். இந்தாண்டு எங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது,பதநீர் விற்பனை செய்யும் இவர்களுக்கு தினமும் சம்பளமாக ரூ.500ம் தருகின்றனர்.கடந்த ஆண்டுகளில் எங்கள் ஊரில் 15க்கும் மேற்பட்டவர்கள் பனையேறும் தொழில் செய்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு வெறும் சிலர் மட்டுமே பனைஏறும் தொழில் செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து பதநீரை வாங்கி நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.பனை ஏறும் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு குறைந்தது 30படி முதல் 50படி(அதாவது ஒரு படி என்பது 1.75லிட்டர்)வரை பதநீர் தருவார்கள். ஒரு படி பதநீருக்கு ரூ.80 விலையாக கொடுப்போம். வாங்கும் பதநீரானது பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.90 என்ற ரீதியிலும், ஒரு டம்ளர் பதநீர் ரூ.20 என்ற ரீதியிலும் விற்பனை செய்கிறோம்.
தற்போது சீசன் துவங்கி உள்ளதால் நாள்தோறும் 65 முதல் 70 படி வரை பதநீர் விற்பனைக்காக வருகிறது. எங்களிடம் சுத்தமான பதநீர் கிடைப்பதால் பொதுமக்கள் விரும்பி வந்து வாங்கி செல்கின்றனர். வரும் ஜூன் ஜுலை மாதம் வரை பதநீர் சீஸன் சிறப்பாக இருக்கும்.எங்கள் விற்பனை மையத்தில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மாலை 6மணி வரை பதநீர் விற்பனை செய்வோம். பதநீராக விற்பனை செய்தால் தான் லாபம் கிடைக்கும். கருப்பட்டி தயாரிக்கும் போது செலவு அதிகமாகி லாபம் ஏதும் கிடைக்காது. பதநீர் விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதைக் கொண்டு தான் எங்கள் ஊர் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் 3 ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கொடுக்கிறோம். இதற்காக மாதம் ரூ.30 ஆயிரம் வரை செலவிடுகிறோம் என்கிறார்.
இந்நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்காண ஊதியத்தை அரசே ஏற்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்கிறார். தொடர்ச்சியாக ஊடகங்களில் இது பதிவிட்டு வந்தாலும் கூட இதுவரை அரசின் பார்வை இப்பள்ளியின் மீது விழவில்லை என்கிறார். அரசின் பார்வை இப்போதாவது திரும்புமா, திரும்பும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.