தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டை அகற்றி மீனவர்கள் கடலுக்கு சென்று வர தற்காலிக பாதை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

 



 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு கடற்கரை கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மணப்பாடு கடற்கரையில் அடிக்கடி மணல் திட்டு உருவாகி படகுகள் கடலுக்கு செல்ல முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியின் இயற்கை அமைப்பு படி இந்த மணல் திட்டு தொடர்ந்து உருவாகி வருகிறது. இந்த பிரச்சினை மணப்பாடு மீனவர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

 


 

மணல் திட்டு உருவானால் படகுகள் கடலுக்கு செல்லவும் முடியாது, அதேபோல் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் கரைக்கு வர முடியாது. குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த மணல் திட்டு பிரச்சினை அதிகமாக இருக்கும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மணப்பாடு மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

 

மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று மணப்பாடு கடற்கரையில் ரூபாய் 45 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு முன்பாக மணப்பாடு மீனவர்கள் கடலுக்கு இடையூறின்றி சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.



அதன்பேரில் மணப்பாடு கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி மீனவர்கள் கடலுக்கு சென்று வரும் வகையில் தற்காலிக முகத்துவார பாதை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மணப்பாடு கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தார். கடற்கரை பகுதியை பார்வையிட்ட அவர், படகில் சென்று தற்காலிக முகத்துவார பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

 

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கூறும்போது, மணப்பாடு கிராமத்தில் விரைவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும். அதற்கு முன்பாக தற்காலிகமாக படகுகள் கடலுக்குள் சென்று வருவதற்கு ஏதுவாக மணல் திட்டினை அகற்றி முகத்துவாரம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் மீன்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தற்காலிகமாக படகுகள் கடலுக்கு சென்று வருவதற்கும், கரையில் படகுகளை நிறுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும். ஓரிரு நாட்களில் மணல் திட்டினை சரிசெய்து அலை குறைவாக உள்ள பகுதியில் மாற்று ஏற்பாடு செய்து தற்காலிகமாக முகத்துவார பாதை அமைக்கப்படும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும்.

 

மணப்பாட்டில் மீன்களை பதப்படுத்தும் அறை இல்லாததால், அதிகளவில் மீன்கள் பிடிபடும் போது மீனவர்கள் சரியான விலைக்கு மீன்களை விற்க முடியவில்லை. மீன்களை பதப்படுத்தும் அறை ஒன்று அமைத்தால் மீன்களை பதப்படுத்தி வைத்து அதிக விலைக்கு விற்க முடியும். எனவே, மீன்களை பதப்படுத்தும் அறை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.