பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய அண்ணாமலை, அடுத்த 8 மாத காலம் கடுமையாக உழைத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை கொண்டுவந்து, அண்ணன் எடப்பாடி பழனிசாமியை ஆட்சிப் பொறுப்பில் அமர வைப்பது நமது கடமை என, பூத் தலைவர்கள், பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தினார். அவரது பேச்சின் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
“அண்ணன் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியை அமர வைக்க வேண்டும்“
பூத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், அடுத்த 8 மாத காலம் கடுமையாக உழைத்து, 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய அண்ணன் எடப்படி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு தொண்டனுக்கும் இருக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
“முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எல்லாம் ‘பய‘ மயம்“
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் பயம், ஆர்ட்டிகிள் 370 - பயம், புதிய கல்விக் கொள்கை - பயம், பி.எம் ஸ்ரீ பள்ளிக்கூடம் - பயம் என்று எதைப் பார்த்தாலும் பயப்படும் முதலமைச்சராக அவர் இருந்து கொண்டிருக்கிறார் என அண்ணாமலை விமர்சித்தார்.
நேற்று லோக் சபாவில், 130-வது சட்டத் திருத்தத்தை, அதாவது, ஊழல் செய்திருக்கும் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் சிறைக்கு செல்லும்போது 31-வது நாள் பதவி இருக்காது, அதற்கும் அவருக்கு பயம் என்று கூறினார். இப்படி, எதைப் பார்த்தாலும் பயந்து பயந்து இருக்கும் முதலமைச்சரை, நிரந்தரமாக பயமில்லாமல் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று பேசினார்.
“4 ஆண்டுகளாக ஒரு குடும்பம் மட்டும் தான் வளர்ச்சியில் உள்ளது“
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கும் பல விஷயங்களை செய்து வருவதாக கூறினார். கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருப்பதாகவும், ஒரு குடும்பம் மட்டும் வளர்ச்சியில் இருப்பதாவும் திமுகவை சாடினார்.
இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூறிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்யும் சாதனைகளையும், தமிழ்நாட்டில் 4 ஆண்டுகள் திமுக அரசால் ஏற்பட்டுள்ள வேதனையையும் மக்களிடம் கூறி, வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று பூத் தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் கேட்டுக் கொண்டார் அண்ணாமலை.
பூத் மட்டத்தில் இருக்கும் தொண்டர்களை நேரடியாக பார்த்து பேச வேண்டும் என்று அமித் ஷா வந்திருப்பதாகவும், வேறு எந்த கட்சியிலும் இதுபோன்று நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அதனால், பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும், அடுத்த 8 மாத காலம் பொறுப்புகளை உணர்ந்து, கடுமையாக உழைத்து, பாடுபட்டு, ஒவ்வொரு வாக்கையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வந்து சேர்த்து, 2026-ல் ஒரு நல்லாட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.